2013-08-10 15:59:44

லெபனன் நடுநிலை காக்க வேண்டும், மாரனைட் ஆயர்கள்


ஆக.,10,2013. இன்றைய உலகில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைகளுக்கு மத்தியில் லெபனன் நாடு நடுநிலையோடு இருந்தால் மட்டுமே, அந்நாட்டின் உறுதியான தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல சதிச்செயல்களிலிருந்து நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று லெபனன் மாரனைட் ஆயர்கள் கூறினர்.
கேதார் மரங்கள் நிறைந்த லெபனன் நாட்டின் தலைவிதிக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்த ஆயர்கள், நாடு மேலும் மேலும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருவதற்கு அந்நாட்டின் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளே காரணம் என்று குறை கூறியுள்ளனர்.
லெபனனில் மக்களாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் தேர்தல் அமைப்பு குறித்த ஒப்புதலுக்கு வருவது, அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி அரசில் எல்லாக் கட்சிகளுக்கும் சமப்பங்கீடு வழங்குவது, அரசியல், சமூக, பொருளாதார உறுதித்தன்மைக்கு வழி அமைப்பது போன்ற விவகாரங்களில் ஓர் உடன்பாடு ஏற்பட வேண்டுமென்று மாரனைட் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
லெபனனிலுள்ள சிரியா நாட்டு அகதிகள்மீது ஒருமைப்பாட்டுணர்வு காட்டுவது, தேசியக் கடமை என்பதையும் அரசு அதிகாரிகளுக்கு ஆயர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.