2013-08-10 15:57:14

திருத்தந்தையின் பரிவிரக்கமும் அன்பும் உலகின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன, பாஸ்டன் கர்தினால்


ஆக.,10,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிவிரக்கமும் அன்பும் உலகெங்கும் வாழ்கின்ற மனிதர்களின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன என்று பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley கூறினார்.
Knights of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு அமெரிக்க ஐக்கிய நாட்டு Texas மாநிலத்தின் San Antonioவில் நடத்திய, 131வது மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் O'Malley, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியில் புதிய வழிகளில் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புதிய ஆர்வத்துடனும், புதிய துணிச்சலுடனும், நமது வழியில் இறைவன் வைக்கும் அனைவர்மீது அதிக அன்புடனும் புதிய வழிகளில் நற்செய்தி அறிவிக்கும் பணியைச் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார் என்றும் கூறினார் கர்தினால் O'Malley.
புதிய மில்லென்யத்தில், வழக்கமாக நாம் செய்யும் மறைப்பணி மட்டும் போதாது, மாறாக, குழுவாக மறைப்பணியைச் செய்ய வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதுபோல அதைக் கனிவுடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley .

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.