2013-08-10 16:12:12

இந்தியப் பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன,புதிய ஆய்வு


ஆக.,10,2013. உலகில் இன்று பேசப்பட்டுவரும் 6,700க்கும் அதிகமான மொழிகளில் பாதி மொழிகள் இந்நூற்றாண்டுக்குள் மறைந்துபோகக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று யுனெஸ்கோ நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒரு மொழியைப் பேசக்கூடிய கடைசி ஆள், இரண்டு வாரங்களுக்கு ஒருவர் வீதம் இறந்து வருகின்றார் என்று கூறியுள்ள டிஸ்கவரி என்ற ஊடகம், ஒரு மொழியைப் பேசக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், அவர்கள் முதுமை அடைவதாலும் மொழிகள் முற்றிலும் மறையக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்றும் கூறியுள்ளது.
உலகில் 85 விழுக்காட்டு மொழிகளைப் பேசுவோர் ஒரு இலட்சத்துக்கும் குறைவாகவே உள்ளனர் என்று மொழியியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
பிரேசிலின் மக்கள் தொகையில் ஏறக்குறைய இருபது விழுக்காடாக இருக்கும் அந்நாட்டின் பூர்வீக இன மக்கள் 170 மொழிகளைப் பேசுகின்றனர்.
மேலும், இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய, நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது. தற்போது ஏறக்குறைய 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

ஆதாரம் : Discovery







All the contents on this site are copyrighted ©.