2013-08-09 16:30:50

மியான்மார் இராணுவப் பிரிவிலிருந்து சிறார் விடுதலை, ஐ.நா. வரேவற்பு


ஆக.09,2013. சிறார், இளையோர் என 68 பேரை மியான்மார் அரசு ‘Tatmadaw’ என்ற இராணுவப் பிரிவிலிருந்து விடுவித்ததை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைநல அமைப்பான யுனிசெப் வரவேற்றுள்ளது.
“சிறார் வாழ்வதற்கும், வளர்வதற்கும் ஏற்ற இடம் இராணுவம் இல்லை என்பதால், இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்க்காகவும், இளையோருக்காகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்று மியான்மார் நாட்டுக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் அசோக் நிகம் (Ashok Nigam) தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட சிறார், அவர்கள் குடும்பத்தோடு மீண்டும் இணைய அவர்களை வாழ்த்துகிறோம் என்றும் அவர் கூறினார்.
மியான்மார் நாட்டின் இச்செயலை வரவேற்பதாகவும், இராணுவத்தில் இன்னும் இருக்கின்ற அனைத்துச் சிறாரையும் விடுவிக்கத் துரிதமான நடவடிக்கை எடுக்கவும் அரசும் ‘Tatmadaw’வும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. கேட்டுள்ளது.
2012 ஆண்டு ஜூனில் மியான்மார் அரசும், ஐ.நா.வும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர் மியான்மார் இராணுவப் பிரிவிலிருந்து இதுவரை 176 சிறார்ப் படைவீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.