2013-08-09 16:24:27

நாகசாகியில் கர்தினால் டர்க்சன் : மன்னிப்பு, ஒப்புரவுக்கு முதல்படி


ஆக.,09,2013. இறைவனின் கொடையாகிய உண்மையான அமைதியைப் பெறுவதற்கு மன்னிப்பே முதல்படி என்று, நாகசாகியில் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதன் 68ம் ஆண்டு நிறைவு நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று அந்நகரில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
நாகசாகியில் அணுகுண்டுக்குப் பலியானவர்களின் நினைவுத் திருப்பலியை அந்நகர் ஆயருடன் இணைந்து நிகழ்த்திய கர்தினால் டர்க்சன், உலகில் அமைதி நிலைபெற அழைப்பு விடுத்தார்.
அமைதி, இறைவன் மற்றும் மனித சமுதாயத்தின் ஒத்துழைப்பினால் ஏற்படுவது என்றும், இறைவன் மனிதருக்கு அமைதி எனும் கொடையை வழங்குகிறார் என்பது உண்மையெனினும், அமைதியை நிலைநாட்டுவதற்கு மனித சமுதாயம் அன்புடன் உழைக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டால் 74 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.