2013-08-09 15:54:46

ஆகஸ்ட் 10, 2013. கற்றனைத்தூறும்...... சீத்தாப்பழம்


சீத்தாப்பழம், வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) வகையைச் சேர்ந்த தாவர இனத்தின் கனியாகும். அனோனா வகை இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். ஈழத் தமிழர் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கின்றனர். வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். சீதளப் பழம் என்பதே சீத்தாப்பழமாயிற்று என்பர்.
சீத்தாப்பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. சீத்தாப்பழத்தை உண்டால், செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காசநோய் இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தும்.
தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவக் குணத்தை சீத்தாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஆதாரம் : தமிழ் விக்கிபீடியா








All the contents on this site are copyrighted ©.