2013-08-09 16:27:50

Weliweriyaவில் இராணுவத்தின் தாக்குதலுக்கு அனைத்து மதத்தவரும் கண்டனம்


ஆக.,09,2013. இலங்கையின் Weliweriya கிராமத்தில் குடிநீர் கேட்டுப் போராடிய அப்பாவி குடிமக்கள்மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளையோர் இறந்துள்ளவேளை, இவ்வன்முறைக்கு எதிரான தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் பல்சமயத்தவர்.
இவ்வெள்ளியன்று கொழும்புவில் கண்டன ஊர்வலம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான கத்தோலிக்க, புத்த, இந்து மற்றும் இசுலாம் மதத்தவர்கள், காந்தியின் சத்யாகிரக வழியைப் பின்பற்றி அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்தினர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
CSM என்ற கிறிஸ்தவ தோழமை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்டன அமைதி ஊர்வலத்தில், ஆயுதம் ஏந்தாத அப்பாவி குடிமக்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அரசின் இப்பயங்கரவாதச் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் சென்றனர்.
மேலும், இலங்கை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித், இவ்வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது மற்றும் நியாயப்படுத்தப்பட முடியாதது என்று கூறியுள்ளார்.
உண்மை, தியாகம், வன்முறையின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சத்யாகிரகக் கொள்கையானது, 1906ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாத்மா காந்தியால் முதன் முதலில் நடைமுறைபடுத்தப்பட்டது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.