2013-08-08 17:46:39

ஜப்பான் நாகசாகியில் அமைதிக்கான செபம்


ஆக.08,2013. இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் நினைவுதினத்தின் முந்தைய நாளான இவ்வியாழனன்று அந்நகரில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து உலக அமைதிக்காகச் செபித்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
போர்கள், பசியால் வாடும் இலட்சக்கணக்கான மக்கள், எண்ணற்ற அகதிகள், இயற்கைப்பேரழிவுகள், கொடூர மோதல்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், நம் மனிதாபிமானமற்ற நிலைகள் மற்றும் சகோதர ஏழைகள் குறித்த பாராமுகம் போன்றவவைகளின் முன்னிலையில், கருணையின் கண்களை நாம் கொண்டிருக்க வேண்டுமென இறவனை நோக்கிச் செபித்தார், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன்.
உமது படைப்புகள் அனைத்தும் கண்ணீரின்றியும் வன்முறையின்றியும் வேதனையின்றியும், அச்சத்திலிருந்து விடுதலை பெற்று அமைதியில் வாழ்ந்து, இறைவனின் அன்பிலும் உண்மையிலும் நடை பயில உதவுமாறு இறைவனை நோக்கி தனது செபத்தில் விண்ணப்பித்தார், திருத்தந்தையின் பிரதிநிதியாக ஜப்பானில் அமைதித் திருப்பயணம் மேற்கொள்ளும் கர்தினால்.
நம் இதயம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதே முதல் அமைதி என்ற கர்தினால் டர்க்சன், நாமும் அமைதியை கட்டியெழுப்புவதைக் கற்றுக்கொள்வோமாக என அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.