2013-08-08 17:46:20

அர்ஜென்டினாவில் ஏழைகளுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடும் தலத்திருஅவைக்கு திருத்தந்தை வாழ்த்து


ஆக.08,2013. அர்ஜென்டினாவின் தலத்திருஅவையால் ஏற்படுத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகின்ற “Más por Menos” என்ற நிதி சேகரிப்பில் பங்குபெறும் அனைத்துக் கத்தோலிக்கரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்தியுள்ளார்.
நமக்காக அனைத்தையும் கொடுத்த கடவுளின்மீது கொண்டுள்ள விசுவாசத்தினால் தூண்டப்பட்டு கிறிஸ்தவ ஒற்றுமைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரையும் திருத்தந்தை ஊக்குவிப்பதாக திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone அவர்களால் அனுப்பப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பொருட்டு அர்ஜென்டினா நாட்டு மக்கள் அனைவரும், எப்பொழுதும் கிறிஸ்துவை தன்னில் பிரதிபலிக்கவும், செபம் மற்றும் திருவருட்சாதனங்களில் பங்குகொள்வதன் வாயிலாக அவருடன் கொண்டுள்ள நட்பில் வளரவும், அதன்மூலம் தேவையில் இருப்போருக்கு, குறிப்பாக, ஏழ்மையில் இருப்போருக்கு தங்களுடைய ஆதரவையும், உதவியையும் கொடுக்கவும் திருத்தந்தை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழை மக்களின் நலத்திட்டங்களுக்கென ஒவ்வோர் ஆண்டும் நிதிசேகரிப்பை நடத்திவரும் அர்ஜென்டினா தலத்திருஅவை, இவ்வாண்டிற்கென "உன்னுடைய உதவியில் நம்பிக்கை வைத்துள்ளோம்" என்பதை தலைப்பாக எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த நிகழ்வின் மூலமாக 29 இலட்சம் டாலர் திரட்டப்பட்டு, அது, அர்ஜென்டினாவில் உள்ள ஏழை மறைமாவட்டங்களால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.