2013-08-07 16:24:20

நைஜீரியக் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளைக் களைய அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள்


ஆக.07,2013. நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிரான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவ்வன்முறைகளை அகற்றுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒரு வல்லுனர் விண்ணப்பித்துள்ளார்.
வாஷிங்டனிலுள்ள ஹட்சன் சமய சுதந்திர நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான Paul Marshall அவர்கள், துன்புறும் நைஜீரியக் கிறிஸ்தவர்க்கு ஆதவான இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஏறக்குறைய 12 ஆண்டுகளாக கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளும் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன என்றும், இவை கடந்த மூன்றாண்டுகளாக அதிகரித்து வருகின்றன என்றும் CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார் Marshall.
2012ம் ஆண்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், முஸ்லீம்களை அதிகமாகக் கொண்டுள்ள வடக்கிலிருந்து பெருமளவான கிறிஸ்தவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கை கூறுகிறது என்றும் கூறினார் Marshall.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.