2013-08-07 16:07:30

ஆகஸ்ட் 08, 2013. கற்றனைத்தூறும்...... உலகில் உணவு வீணடிப்பு


இன்றைய உலகில் போதிய சத்துணவின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 100 கோடியாக இருக்க, உலகம் முழுவதும் மொத்த உணவு தயாரிப்பில் 30 முதல் 50 விழுக்காடு, அதாவது 120 கோடி டன் முதல் 200 கோடி டன் வரை, ஒவ்வோர் ஆண்டும் உணவு வீணாக்கப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 4 கோடி டன் உணவு அமெரிக்க ஐக்கிய நாட்டில் வீடுகளிலும், கடைகளிலும், உணவுச் சேவை மையங்களிலும் வீணடிக்கப்படுகிறது. இந்த அளவு உணவே போதும் உலக ஏழைகளின் பசி போக்க. வீணடிக்கப்படும் உணவை உற்பத்திச் செய்ய பயன்படுத்தப்படும் நீர், 900 கோடி மக்களின் தேவைகளைக் கவனிக்கப் போதுமானதாகும்.
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தேவையைவிட இரண்டு மடங்குக்கு மேல் உணவை உற்பத்திச் செய்கின்றன. ஐரோப்பாவில் பிடிக்கப்படும் மீன்களில் 40 முதல் 60 விழுக்காடு, எறியப்படுகின்றது.
2050ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 900 கோடியை எட்ட உள்ள நிலையில், உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்படவேண்டியுள்ளது. உணவு வீணாவதைத் தடுப்பதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்.
சஹாராவை அடுத்த ஆப்ரிக்க நாடுகளிலும், ஒவ்வோர் ஆண்டும் 400 கோடி டாலர் மதிப்புடைய உணவு, அறுவடைக்குப்பின், போதிய சேமிப்பு வசதிகளின்மை மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் வீணடிக்கப்படுகின்றது. இது 4 கோடியே 80 இலட்சம் மக்களின் பசியைப் போக்கவல்லது. ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்காவில், ஒருவருக்கு 95 முதல் 115 கிலோ என்ற வகையிலும், ஐரோப்பாவில் 60 முதல் 110 கிலோ என்ற வகையிலும், வளரும் நாடுகளில் 6 முதல் 11 கிலோ என்ற வகையிலும் உணவு வீணடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : FAO/AP/REUTER








All the contents on this site are copyrighted ©.