2013-08-06 16:22:19

ஹிரோஷிமாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட அழைப்பு


ஆக.06,2013. ஜப்பானின் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற, மனித வரலாற்றில் முதல் அணுகுண்டு வீசப்பட்டதன் 68ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படுமாறு அழைப்பு விடுத்தனர்.
Enola Gay என்ற அமெரிக்கப் போர் விமானம் ‘Little Boy’ என்ற அணுகுண்டை 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவில் போட்ட அதே நேரத்தில், இச்செவ்வாயன்று ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் ஜப்பான் ஆயர் Thomas Manyo Maeda, பிரதமர் Shinzo Abe உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று அமைதிக்காகச் செபித்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் ஹிரோஷிமா நகரின் அமைதியின் மணி ஒலிக்க, நகர மேயர் உரை வழங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வோரில் கடந்த ஓராண்டில் இறந்தவர்களின் பெயர்களும் இந்நாளில் வாசிக்கப்படுகின்றது.
தற்போது 2,01,779 பேர் இன்னும் உயிர் வாழ்கின்றனர். Hibakusha என அழைக்கப்படும் இவர்கள் ஜப்பானில் உயர்வாக மதிக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டும் நகர மேயர் Kazumi Matsui அமைதிக்கு அழைப்பு விடுக்கும் செய்தியை வழங்கினார்.
ஏறக்குறைய ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் இறந்தனர். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் காலவரையறையின்றி சரணடைந்தது. இதன்மூலம் இரண்டாம் உலகப்போரும் முடிவடைந்தது.
இரஷ்யாவிலுள்ள 8,500 அணுஆயுதங்கள் உட்பட உலகின் ஒன்பது நாடுகளில் 17,300 அணுஆயுதங்கள் உள்ளன.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.