2013-08-06 16:31:59

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் குறித்து இயேசு சபை மாநில அதிபர் கவலை


ஆக.06,2013. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில் சில இயேசு சபை அருள்பணியாளர்களின் நிலை குறித்த ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் இயேசு சபையின் மத்திய கிழக்கு மாநிலத் தலைவர் இயேசு சபை அருள்பணி Victor Assouad.
சிரியாவின் சண்டையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும் இயேசு சபை அருள்பணியாளர்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அருள்பணி Assouad, சிரியாவின் வடக்கில் ஒரு வாரத்துக்கு மேலாகக் காணாமற்போயுள்ள, உரோமையைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio, Homs நகரின் Boustan Diwan இயேசு சபையினரின் இல்லத்தில் மக்களோடு வாழ்ந்துவரும் ஹாலந்து நாட்டு இயேசு சபை அருள்பணி Frans van der Lugt ஆகியோர் குறித்த கவலையை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் இயங்கிவரும் ஜிகாத் புரட்சிக் குழுவால் அருள்பணி Dall'Oglio கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அருள்பணி Assouad, இவரின் விடுதலைக்காக முயற்சித்து வருகிறவர்களுக்குத் தனது நன்றியையும் கூறியுள்ளார்.
மேலும், சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அருள்பணி Dall'Oglioவைத் தான் நினைத்துக்கொண்டிருப்பதாக புனித இஞ்ஞாசியார் விழாத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் இராணுவம் புரட்சியாளர்களுக்கு எதிராக நடத்திவரும் தாக்குதல்களில் ஏறக்குறைய 4 இலட்சம் மக்கள் ஹோம்ஸ் நகரில் தனித்துவிடப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.