2013-08-06 16:34:20

கம்யூனிச ஆட்சியில் தூக்கிலிடப்பட்ட அருள்பணியாளர் ஒருவரின் மார்பளவுச்சிலை திறப்பு


ஆக.06,2013. செக் குடியரசின் முன்னாள் கம்யூனிச ஆட்சியில் தூக்கிலிடப்பட்ட அருள்பணி Václav Drbola என்பவரின் மார்பளவுச்சிலை ஒன்று அந்நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்துவதற்கு செக் குடியரசின் தலத்திருஅவை எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் ஒரு கட்டமாக இச்சிலை திறப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிச ஆட்சியில் அருள்பணி Václav Drbola தனது 39வது வயதில் 1951ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டார். இவரோடு சேர்ந்து இன்னும் பத்துப் பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்கள் 11 பேரும், மூன்று கம்யூனிச அதிகாரிகளைக் கொலை செய்தார்கள் என தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாகினர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிச ஆட்சியில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என ஏறக்குறைய 65 பேர் தூக்கிலிடப்பட்டனர். திருஅவைத் தலைவர்கள் பலர் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு உள்ளாகினர். திருஅவைச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, திருப்பிக் கொடுக்கப்பட முடியாத சொத்துக்களுக்கு இழப்பீடாக, 300 கோடி டாலரை இழப்பீடாக வழங்க செக் அரசு அண்மையில் உறுதி அளித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.