2013-08-05 16:57:23

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய முந்நூறு ஆண்டுகள் நிறைவு விழா


ஆக.05,2013. நாம் எதைக் கேட்டாலும் நமக்குக் கிடைக்கச் செய்வாள் நம் மரியன்னை என்ற முழு நம்பிக்கை வேண்டும் என்று தன் மறையுரையில் கூறினார் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் கட்டப்பட்டதன் முந்நூறு ஆண்டுகள் நிறைவையொட்டி, ஆகஸ்ட் 5, இத்திங்கள் காலை நடைபெற்ற இறுதி நாள் திருப்பலியில் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் இவ்வாறு உரைத்தார்.
தூத்துக்குடி ஆயர் யுவோன் அம்புரோசு அவர்கள் தலைமையேற்று நடத்திய திருப்பலியில், சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம் அவர்களும், தொண்ணூறு குருக்கள் ஏராளமான அருள் சகோதரிகள், மற்றும் பல்லாயிரம் பொதுநிலையினரும் பங்குகொண்டனர்.
கோயில் முகப்பில் கொடிமர வளாகத்தில் திருப்பலி நடந்த இதே இடத்தில் முந்தின நாள் இரவு மாலை ஆராதனையும் நடந்தது. பல்லாயிரக் கணக்கானோர் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் மறையுரை ஆற்றிய ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள், கடவுளை ஒதுக்கித்தள்ளுகிறோம் அல்லது மறக்கிறோம் என்று முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளை நினைவுபடுத்தி, மரியன்னை போல முழு விசுவாசம் கொண்டு கடவுள் வார்த்தையை ஏற்போம் அதன்படி வாழ்வோம் என்று அறிவுறுத்தினார்.
மதுரைப்பேராயர் பீட்டர் பெர்னாந்து அவர்கள் விடியற்காலை 4:30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றினார். காலைத் திருப்பலிக்குப்பின் அவரே தங்கத்தேரை அர்ச்சித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தங்கநிறத்திலும் அரியமர வேலைப்பாடுகளாலும் அழகுற அமைந்திருந்த தேரின் வடத்தை சில நூறுபேர் இழுத்து தேரோட்டம் தொடங்கியபோது, ‘தெ தேயும்’ என்ற நன்றிப்பாடலைத் தொடர்ந்து, ‘மரியே வாழ்க; மாதா வாழ்க’ எனும் கோஷம் எழும்பி அடங்க ஓரிரு நிமிடங்கள் எடுத்தன.
1542ம் ஆண்டில் கட்டப்பட்ட கோவில் அழிவுகளுக்குள்ளாகி, விஜிலியோ மான்ஸி எனும் இயேசுசபை குருவால் புதிதாக எழுப்பப்பட்டு, 1713ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாள் பனிமய அன்னைவிழாவன்று புனிதப்படுத்தப்பட்டது. முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்களால், 1982ம் ஆண்டில் இக்கோவில் பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
1806ல் தொடங்கப்பட்ட தேரோட்டம் இதுவரை 14 முறை நடந்துள்ளது. நேவிஸ் பொன்சேக்கா எனும் கத்தோலிக்கக் கலைஞர், திருவெளிப்பாடு நூல் 12ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது போலவே இத்தேரை நுணுக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைத்தார்.
திருவிழாவையொட்டிய நவநாட்களில் ஒவ்வொரு நாளும் ஆறு திருப்பலிகள் நடந்தன. நூற்றுக்கணக்கானோர் ஒப்புறவு அருட்சாதனம் பெற்று மகிழ்ந்தனர். செபமாலை, பிரார்த்தனை, நற்கருணை ஆசீர் எனும் பல பக்தி முயற்சிகளுக்கிடையே, பல்லாயிரம் இந்து, இஸ்லாமிய மதத்தவரும் அன்னையின் அருள் வேண்டி வந்திருந்தனர்.
ஆகஸ்ட் 5, திங்கட்கிழமை, உள்ளூர் விடுமுறை என்பது இவ்வூரினர் அனைவரும் ஒன்று திரண்டு மரியன்னைக்கு மரியாதை செய்துள்ளனர் என்பதற்குச் சான்று.

ஆதாரம் : சேவியர் ராஜன், சே.ச.








All the contents on this site are copyrighted ©.