2013-08-05 16:53:09

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவோடு நாம் வைத்திருக்கும் உறவு நம் இதயங்களை மகிழ்ச்சியால் நிறைக்கின்றது


ஆக.,05,2013. உண்மையான மகிழ்ச்சியானது நாம் வைத்திருக்கும் பொருட்களில் அல்ல, மாறாக, அது நாம் இயேசுவோடு கொண்டுள்ள உறவில் கிடைக்கிறது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏறக்குறைய முப்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவோடு நாம் பெறுகின்ற அனுபவம், நம்மில் நிறைவாழ்வைக் கொடுக்கின்றது. நம்முடைய உண்மையான செல்வம் மனிதர்களோடு நாம் பகிர்ந்துகொள்ளும் இறையன்பு என்றும் கூறினார்.
மேலும், இம்மூவேளை செப உரையில், கடந்த ஞாயிறன்று ரியோ தெ ஜனெய்ரோவில் தான் நிறைவுசெய்த 28வது உலக இளையோர் தினத்தை நினைவு கூர்ந்த திருத்தந்தை, "இங்கு பல இளையோரைப் பார்க்கிறேன். இது ரியோ தெ ஜனெய்ரோ போல் தெரிகிறது" என்றும் கூறினார்.
உலக இளையோர் தின நிகழ்வுக்காக அனைவரையும் இறைவனுக்கு நன்றிகூற அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், உலக இளையோர் தினத்தின் அனுபவங்கள், இந்த நாட்களோடு முடிந்துவிடாமல் நீண்ட விசுவாச வாழ்வுப் பயணத்தின் படிநிலைகளாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உலக "இளையோர் தினத்தில் பங்குபெறுபவர்கள், திருத்தந்தையைப் பின்பற்றுவதில்லை, மாறாக, இயேசுவின் சிலுவையைச் சுமந்துகொண்டு அவரையே பின்பற்றுகிறார்கள். இந்த விசுவாசப் பயணத்தில் திருத்தந்தை அவர்களுக்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் இருப்பதாகவும் கூறினார் அவர்.
இளையோரைத் திறந்த மனதுடனும் பெருந்தன்மையோடும் வரவேற்ற பிரேசில் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், உலக இளையோர் தினத்தில் பங்குகொண்ட அனைவரும் தாங்கள் பெற்ற அனுபவத்தை ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வில் வாழ்ந்திட, அவர்களுக்காகச் செபிக்கவும் அழைப்பு விடுத்தார்.
மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னி விழா, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட பனிமய அன்னைமரி விழா ஆகியவற்றையும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு உருமாற்றம் அடைந்த விழாவான இச்செவ்வாயன்று திருத்தந்தை ஆறாம் பவுல் இறந்ததன் 35ம் ஆண்டு இடம்பெறுவதையும் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வ த்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.