2013-08-03 16:14:34

புனித பூமியில் நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா திருஅவையின் ஒருமைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு - ஆயர் சோமாலி


ஆக.,03,2013. திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்ட நம்பிக்கை ஆண்டு, வருகின்ற நவம்பர் 17ம் தேதி புனித பூமியின் நாசரேத் நகரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்துலக நம்பிக்கை ஆண்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாளில் நாசரேத்தில் உள்ள அனைத்துப் புனித இடங்களைப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாலையில் மெழுகுதிரி பவனியானது மங்களவார்த்தை பசிலிக்காவில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் துணை ஆயர் William Shomali இந்நிகழ்வு குறித்து கூறுகையில், இந்த நிகழ்வுக்காக 60,000 திருப்பயணிகள் பங்குபெறுமளவுக்கு இடம் ஏற்பாடு செய்ய அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வானது அனைத்து இறைமக்களின் விழாவாக இருக்கும் எனவும், இந்நிகழ்வில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிகமாகப் பங்கேற்பார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் Shomali.
அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளும் பல மொழிகளில் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ள ஆயர் Shomali, எருசலேம் நகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருவழிபாடானது திருஅவையின் ஒருமைத்தன்மையை பிரதிபலிப்பதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
"இது ஒரு சிறப்பான மற்றும் நம் மனங்களை முழுமையாக இறைவனை நோக்கி மாற்ற உறுதுணை புரிகின்ற காலம்" என்று சொல்லி, நம்பிக்கை ஆண்டைத் தொடங்கிவைத்தார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.