2013-08-03 16:06:58

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் செய்தி முஸ்லீம்கள்மீது அவர் கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளம்


ஆக.,03,2013. 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகின் அனைத்து முஸ்லீம்களுக்கும் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, அவர் முஸ்லீம்கள்மீது கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் வாழ்த்துச் செய்தி, அவர் முஸ்லீம்களுடன் உரையாடலை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள பெரும் முயற்சியாக இருக்கின்றது என்று, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் கர்தினால் Tauran.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் அவர் பேராயராகப் பணியாற்றிய புவனோஸ் ஐரெஸ் உயர்மறைமாவட்டத்திலும் முஸ்லீம்கள்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்றும் கூறினார் கர்தினால் Tauran.
இவ்வாண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே இச்செய்தியை வெளியிட்டிருப்பது, முழுவதும் அவரது முயற்சியே என்றும் கூறிய கர்தினால் Tauran, அரபு மொழியைப் படிப்பதற்காக, புவனோஸ் ஐரெஸ் உயர்மறைமாவட்டத்திலிருந்து கெய்ரோவுக்கு ஓர் அருள்பணியாளரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியது குறித்தும் தெரிவித்தார்.
Id al-Fitr பண்டிகை இம்மாதம் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.