2013-08-02 16:12:26

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இரமதான் செய்தி


உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு,

உண்ணாநோன்பு, செபம், தர்மம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இரமதான் மாதத்தின் இறுதியில், 'இத் ஆல்-ஃபித்ரு' (Id al-Fitr) பண்டிகையைக் கொண்டாடும் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
இத்தருணத்திற்கென ஒவ்வோர் ஆண்டும் திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவை செய்தியை அனுப்புவது வழக்கம். வாழ்த்துக்களுடன், பொதுவான சிந்தனைகளை எழுப்பும் வண்ணம் இச்செய்தி அனுப்பப்படும். இவ்வாண்டு, எனது தலைமைப்பணியின் முதல் ஆண்டு என்பதால், இச்செய்தியினை நான் கையொப்பமிட்டு அனுப்ப முடிவு செய்துள்ளேன். அனைத்து முஸ்லிம் மக்கள் மீதும், சிறப்பாக, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மீதும் நான் கொண்டுள்ள மதிப்பை உணர்த்தவே இவ்வாறு செய்துள்ளேன்.
கர்தினால்கள் என்னை உரோமைய ஆயராகவும், அனைத்துலகக் கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பராகவும் தேர்ந்தெடுத்தபோது, புகழ்மிக்கப் புனிதரான 'பிரான்சிஸ்' அவர்களின் பெயரை நான் தெரிவுசெய்தது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே. இறைவனையும், மனிதர்கள் அனைவரையும் மிக ஆழமான வகையில் அன்புசெய்த இப்புனிதர், 'அனைத்துலக சகோதரர்' என்று அழைக்கப்பட்டார். வறியோர், நோயுற்றோர், தேவையில் இருப்போர் அனைவரையும் அன்பு செய்து, பணிபுரிந்த இப்புனிதர், படைப்பின் மீதும் பெரும் அக்கறை காட்டினார்.
இரமதான் மாதம் முழுவதிலும் குடும்பம், சமுதாயம் என்ற விழுமியங்கள், முஸ்லிம்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை நான் அறிவேன். கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் நற்செயல்கள் ஆகிய கருத்துக்களுடன் இயைந்துசெல்லும் எண்ணங்களை இங்கு காணலாம்.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இவ்வாண்டு இணைந்து சிந்திக்கக்கூடிய கருத்தாக நான் எண்ணிப்பார்ப்பது இதுவே: கல்வி வழியாக, பரஸ்பர மதிப்பை வளர்த்தல்.
நாம் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணரவே இதனை நமது இணைந்த சிந்தனையின் கருவாகத் தேர்ந்தேன். 'மதிப்பு' என்பது, ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பினால் உருவாகும் மரியாதை. 'பரஸ்பரம்' என்பது இருவர் பக்கங்களிலிருந்தும் உருவாகும் முயற்சி; இது ஒருவழிப் பாதை அல்ல.
ஒவ்வொருவரையும் மதிப்பது என்பது, ஒருவரது வாழ்வை மதிப்பதில், அவரது உடலுக்கு ஆபத்து விளைவிக்காமல் காப்பதில், அவருக்குரிய மரியாதையை வழங்குவதில் ஆரம்பமாகிறது. அவரது உடமைகள், அவரது பெயர், அவரது இன, மற்றும் கலாச்சார அடையாளம், அவரது எண்ணங்கள், அரசியல் தெரிவுகள் என்ற அனைத்தையும் மதிப்பதில் அடங்கியுள்ளது. எனவே, நாம் ஒருவர் ஒருவரைப் பற்றி எண்ணுதல், பேசுதல், எழுதுதல் என்ற அனைத்திலும் மதிப்பு வழங்க அழைக்கப்பட்டுள்ளோம். ஒருவருக்கு முன்னிலையில் மட்டுமல்ல, அவர் இல்லாதபோதும், இந்த மதிப்பு காட்டப்படவேண்டும். குடும்பம், பள்ளி, மதம், ஊடகங்கள் ஆகிய அனைத்து அமைப்புக்களும் இந்த இலக்கை அடைவதற்கு தங்கள் பங்கை அளிக்கவேண்டும்.
பொதுவாக, மதங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர மதிப்பைக் குறித்து நோக்குகையில், குறிப்பாக, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் படிப்பினைகள், அடையாளக் குறியீடுகள், விழுமியங்கள் என்ற அனைத்திலும் மரியாதை காட்ட அழைக்கப்பட்டுள்ளோம். மதத்தலைவர்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் அதிக மதிப்பு காட்ட அழைக்கப்பட்டுள்ளோம். தலைவர்கள் மீது, வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடப்பது மிகவும் வேதனை தருகின்றது.
நமது அயலவரின் மதத்தை மதிக்கும்போதும், அவரது விழாக்காலங்களில் வாழ்த்துக்கள் சொல்லும்போதும், அவர்கள் பின்பற்றும் மதக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்கள் எதையும் குறிப்பிடாமல், அவர்களது மகிழ்வில் பங்கு கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இளையோரின் கல்வியைக் குறித்து எண்ணும்போது, அவர்கள் ஒருவர் மற்றவரின் மத நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கேலிக்கு உள்ளாக்காமல், குறை கூறாமல், மதிப்புடன் சிந்திக்கவும், பேசவும் இளையோருக்குக் கற்றுத்தர வேண்டும்.
எந்த ஒரு மனித உறவுக்கும், அதிலும் சிறப்பாக, மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில், பரஸ்பர மரியாதை அடிப்படையானது. இதன் வழியாக உண்மையான, நீடித்த நட்பு வளர முடியும்.
2013ம் ஆண்டு, மார்ச் மாதம் 22ம் தேதியன்று, திருப்பீடத்துடன் அரசியல் உறவு கொண்டுள்ள நாடுகளின் தூதர்களை நான் சந்தித்தபோது, கூறியது இதுதான்: "மற்ற மனிதர்களை அலட்சியம் செய்துவிட்டு, இறைவனுடன் உண்மையான உறவுகொள்ள முடியாது. எனவே, வெவ்வேறு மதங்களுடன், குறிப்பாக, இஸ்லாம் மதத்துடன் உரையாடல் முயற்சிகளை தீவிரப்படுத்துவது மிகவும் முக்கியம். என் தலைமைப்பணியின் துவக்கத்தைக் குறிக்கும் திருப்பலியின்போது, இஸ்லாமிய மதத் தலைவர்கள், மற்றும் அரசுத் தலைவர்கள் வந்திருந்ததை நான் பெரிதும் மதிக்கிறேன்." மதநம்பிக்கை கொண்ட அனைவர் மத்தியில், குறிப்பாக, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இடையில் உரையாடலும், கூட்டுறவு முயற்சிகளும் வளரவேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த வார்த்தைகள் வழியாக வலியுறுத்த விழைந்தேன்.
இந்த எண்ணங்களுடன், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பரஸ்பர மதிப்பு, நட்பு ஆகியவற்றை வளர்ப்பவர்களாக இருக்கவேண்டும்; குறிப்பாக, கல்வி வழியாக இவை வளரவேண்டும் என்ற என் நம்பிக்கையை வலியுறுத்த விழைகிறேன்.
உங்களுக்கு என் செபம் நிறைந்த வாழ்த்துக்களை அனுப்புகிறேன். உங்கள் வாழ்வு மூலம் எல்லாம் வல்லவர் இன்னும் புகழடையவும், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளோருக்கும் அவர் மகிழ்வைத் தரவும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.