2013-08-02 16:29:31

தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு யுனிசெப் வலியுறுத்தல்


ஆக.02,2013. "தாய்ப்பால், ஒரு குழந்தையின் முதல் நோய்த்தடுப்பு மற்றும் மிகவும் பயனுள்ள மலிவான உயிர்காக்கும் பொருள்" என்று ஐக்கிய நாடுகள் அவை குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் நிறுவன துணை நிர்வாக இயக்குனர் கீதா ராவ் குப்தா கூறினார்.
ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மிகச்சிறந்த மற்றும் மலிவான வழி தாய்ப்பாலூட்டுதல்; அதனை ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும் திறமையான தலைவர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் இவ்வாண்டுக்கான அழைப்பை அதன் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
உலக நல்வாழ்வு நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து 1990ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதியன்று, குழந்தைகளுக்குத் தாய்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் ‘innocenti’ என்ற அறிக்கையை வெளியிட்டன.
ஒவ்வோர் ஆண்டும் அந்த அறிக்கையின் நினைவாக ஆகஸ்டு 1 முதல் 7 முடிய உலகெங்கிலும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் தாய்ப்பால் உலக வாரமாக கொண்டாடப்படுகிறது.
உலக நல்வாழ்வு நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் அதன் ‘innocenti’ அறிக்கையில் ஒரு குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு முதன்மையான உணவாகத் தாய்ப்பால் கொடுக்கவும் அதை 2 வருடங்கள்வரை நீட்டிக்கவும் பரிந்துரைக்கிறது.
தாய்ப்பால் ஊட்டப்படுகின்ற குழந்தைகள், தாய்பால் ஊட்டப்படாத குழந்தைகளைவிட 14 மடங்கு உயிர்பிழைக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர். குழந்தையின் கற்றுணரும் திறமையை வளர்க்க உறுதுணையாகவும் உடல் அளவுக்கதிகமாக பருமனாவதைத் தடுக்கவும் மற்றும் வயதுமுதிர்ந்த காலத்தில் நீண்டகால நோய்களிலிருந்து விடுபடவும் தாய்ப்பால் பயனளிக்கிறது.
2012ம் ஆண்டில் 6 மாத வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 39 விழுக்காட்டினரே தாய்ப்பால் ஊட்டபட்டுள்ளதாய ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது.
மேலும், தமிழகத்தில், 60 விழுக்காட்டுப் பெண்கள், குழந்தைகளுக்குச் சரியாகத் தாய்ப்பால் கொடுப்பதில்லை, என, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறியுள்ளார்

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.