2013-08-02 16:18:50

கத்தோலிக்கத் திருஅவை பிற சமயத்தவருடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கு ஆவல் கொண்டுள்ளது


ஆக.,02,2013. கத்தோலிக்கத் திருஅவை பிற மதத்தவரின் விழாக்களையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்புவது, வெறும் வாழ்த்தோடு நின்றுவிடாமல், அம்மதத்தவருடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கான ஆவலை வெளிப்படுத்துவதாய் உள்ளது என, திருப்பீட பல்சமய உரையாடல் அவை தெரிவித்துள்ளது.
இரமதான் நோன்பு மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு உலக முஸ்லீம்களுக்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திருப்பீடம் வாழ்த்துச் செய்தி அனுப்பி வருவது பற்றிக் குறிப்பிட்ட திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் அருள்பணி Miguel Àngel Ayuso Guixot இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய உலகைக் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பில் 1967ம் ஆண்டில் முதன்முறையாக 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருப்பீட பல்சமய உரையாடல் அவை தொடர்ந்து இப்பண்டிகைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வருவதாகவும், வளைகுடாச் சண்டை ஏற்படுத்திய பெரும் அழிவுகள் மற்றும் துன்பங்களுக்குப் பின்னர் 1991ம் ஆண்டில் இப்பண்டிகைக்கு, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களே வாழ்த்துச் செய்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளார் அருள்பணி Guixot.
2013ம் ஆண்டின் 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.