2013-08-02 16:25:36

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எருசலேம் காரித்தாஸ் இயக்குனர் வரவேற்பு


ஆக.,02,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே மீண்டும் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளை வரவேற்றுள்ள அதேவேளை, இதனால் அதிகப் பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார் எருசலேம் காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி Raed Abusahliah.
மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள அருள்பணி Abusahliah, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையேயுள்ள பிரச்சனைகளுக்கு உரையாடல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும், ஆயினும் தற்போதைய பேச்சுவார்த்தைகளினால் நிறையப் பலன்கள் கிடைக்கும் என, தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் ஏற்கனவே உள்ளன, இன்னும் புதிதாகத் தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றுரைத்த அக்குரு, இரு நாட்டவர், இரு நாடு என்ற நிலை இயலாததாகவே தெரிகின்றது என்றும் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே மீண்டும் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerryயின் முயற்சியினால் வாஷிங்டனில் நடத்தப்பட்டது. இதற்கிடையே, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.