2013-08-02 16:21:12

அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள்


ஆக.,02,2013. உலகளாவிய பிரான்சிஸ்கன் சபையினர் உரோம் திருத்தந்தையுடன் கொண்டிருக்கும் மிகச் சிறப்பான உறவின் அசாதாரண அடையாளங்களில் ஒன்றான அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள் இவ்வியாழன் மாலை அசிசியின் புனித தூதர்களின் மரியா பசிலிக்காவில் தொடங்கியுள்ளன.
புனித பிரான்சிஸ், பிரான்சிஸ்கன் சபையைத் தோற்றுவித்த Portiuncula என்ற சிற்றாலயத்தை மையத்தில் வைத்து எழுப்பப்பட்டுள்ள அசிசியின் புனித தூதர்களின் மரியா பசிலிக்காவில் தொடங்கியுள்ள இக்கொண்டாட்டங்களில், இத்தாலியின் உம்பிரியா மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் இடம்பெறுகின்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற அக்டோபரில் அசிசி செல்லவிருப்பதற்கு மக்களைத் தயாரிக்கும் நோக்கத்தில் இவ்வாண்டு அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள் குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய பிரான்சிஸ்கன் சபை அருள்பணி David-Maria Jaeger, பிரான்சிஸ்கன் சபையே, திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதாக வாக்குறுதி எடுத்த முதல் துறவு சபை என்று கூறினார்.
திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதை, தங்களின் சபை ஒழுங்குகளுக்கும் ஆன்மீகத்துக்கும் முக்கியமானதாகப் பிரான்சிஸ்கன் சபையினர் கருதினர் என்றும், புனித இலொயோலா இஞ்ஞாசியாரும் இயேசு சபையும் பிரான்சிஸ்கன் சபையினரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றித் திருத்தந்தையரோடு மிகச் சிறப்பானப் பிணைப்பை ஏற்படுத்தினர் என்றும் அருள்பணி Jaeger தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2ம் தேதி Portiuncula சிற்றாலயத்தைத் தரிசிப்பவர்களுக்குப் பரிபூரணபலன் வழங்கப்படுவதாகத் தொடக்க காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்நாளில் உலகில் எந்த இடத்திலும் இருக்கும் பிரான்சிஸ்கன் ஆலயங்களைத் தரிசிப்பவருக்குப் பரிபூரணபலன் வழங்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.