2013-08-01 16:31:42

குழந்தைகளுக்கு எதிராக மறைவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொணர UNICEF முயற்சி


ஆக.01,2013. குழந்தைகளுக்கு எதிராக மறைவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொணர்வது சமுதாயத்தின் இன்றியமையாத கடமை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றன என்று UNICEF எனப்படும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பின் தலைமை இயக்குனர் Anthony Lake அவர்கள் இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மறைவில் இழைக்கப்படும் இந்த வன்முறைகளை உலகறியச் செய்வதற்கு, UNICEF அமைப்பு, புதிய முயற்சியொன்றை மேற்கொள்கிறது என்று கூறிய Lake அவர்கள், 14 வயது சிறுமி Malala Yousafzaiக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்ததால், பல்லாயிரம் குழந்தைகள் பயனடைந்தனர் என்று கூறினார்.
UNICEF மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சியை வெளிப்படுத்தும் ஒலி-ஒளி காட்சி ஒன்றில், புகழ்பெற்ற நடிகர் Liam Neesan அவர்கள் உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.
மறைவில் நடைபெறும் இவ்வன்முறைகளால் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது என்றும், இந்தக் கொடுமையை நிறுத்தாமல் போனால், அடுத்தத் தலைமுறை காயப்பட்ட தலைமுறையாக வாழும் என்றும் நடிகர் Neesan அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.