2013-08-01 16:26:40

ஊடகத்துறையில் உருவாகியுள்ள மாற்றங்கள் திருஅவையின் வரலாற்றிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது - பேராயர் Claudio Maria Celli


ஆக.01,2013. ஊடகத்துறையில் உருவாகியுள்ள மாற்றங்கள், வெறும் தொழிநுட்ப மாற்றங்களாக மட்டுமின்றி, கலாச்சார மாற்றங்களாகவும் இருப்பதால், திருஅவையின் வரலாற்றிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 1, இவ்வியாழன் முதல் இச்சனிக்கிழமை முடிய தென் அமெரிக்காவின் ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் நடைபெறும் இலத்தீன் அமெரிக்கக் கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டத்திற்கென, சமூகத்தொடர்பு திருப்பீடத் துறை தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள் அனுப்பியுள்ள ஒலி-ஒளி வடிவச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் தொடர்புகளில் ஆழமானப் பிரிவுகளை உருவாக்கிவரும் உலகப் போக்கிற்கு எதிராக, கத்தோலிக்கத் தொடர்பாளர்கள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் Celli அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இளையோரை தகுந்த முறையில் வழிகாட்டத் தவறும் உலக ஊடகங்களுக்கு மாற்றாக, திருஅவை செயல்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரைகளில் கூறியுள்ளதை பேராயர் Celli அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.