2013-07-31 16:49:25

புனித பிரான்சிஸ் சேவியரும், அருள்பணியாளர் அருப்பேயும் இயேசுசபையினருக்கு அழகான அடையாளங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,31,2013. இயேசு சபையினர் எவரும், கிறிஸ்துவுக்குப் பதிலாக தன்னை மையப்படுத்துவது தவறு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூலை 31, இப்புதனன்று, இயேசு சபையைத் தோற்றுவித்த புனித லொயோலா இஞ்ஞாசியார் அவர்களின் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, உரோம் நகரில் உள்ள இயேசு ஆலயத்தில் காலை 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.
கிறிஸ்துவை மையமாக்குதல், பணியாற்றுவதற்கென கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படுதல், குறைகளை உணர்ந்து, கிறிஸ்துவுக்கு முன்பும், மற்றவர்களுக்கு முன்பும் பணிவுடன் வாழ்தல் என்ற மூன்று கருத்துக்களை, தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
கிறிஸ்துவும், திருஅவையும் இணைபிரியாத ஒரே நெருப்பு என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருஅவை வழியாக கிறிஸ்துவுக்குப் பணி செய்வதே ஒவ்வொரு இயேசு சபையினரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
புனித பவுல், புனித இஞ்ஞாசியார் என்ற இருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக்கூறி, இயேசு சபையினரும் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
நான் கிறிஸ்துவுக்கு என்ன செய்திருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்ன செய்ய வேண்டும்? என்று புனித இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் எழுப்பிய முக்கியக் கேள்விகளை, கூடியிருந்த இயேசு சபையினருக்கு மீண்டும் நினைவுறுத்தினார் திருத்தந்தை.
வாழ்வின் இறுதிகாலத்தில் ஒவ்வொரு இயேசு சபையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டிய அழகான அடையாளங்கள், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களும், அருள் பணியாளர் அருப்பே அவர்களும் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விருவர் வாழ்வின் இறுதியிலும் அவர்கள் கிறிஸ்துவுக்குத் தங்களையே முற்றிலும் அர்ப்பணமாக்கியதைச் சுட்டிக்காட்டினார்.
200க்கும் அதிகமான இயேசு சபையினரும், 500க்கும் அதிகமான ஏனைய துறவியரும், போதுநிலையினரும் கலந்துகொண்ட இத்திருப்பலியின் துவக்கத்தில், இயேசு சபையின் உலகத் தலைவர் அருள் பணியாளர் Adolfo Nicolas அவர்கள், திருத்தந்தையை, ‘நம் சகோதரர் பிரான்சிஸ்’ என்று அழைத்து, தன் வரவேற்பை வழங்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனதால் மட்டுமல்ல, தன் எண்ணங்களிலும், செயல்பாட்டிலும் ஒரு இயேசு சபையினராய் இருப்பதை அவர் பிரேசில் நாட்டிலிருந்து திரும்பிய பயணத்தில் குறிப்பிட்டார் என்பதை அருள் பணியாளர் Nicolas தன் வரவேற்புரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.