2013-07-30 15:57:12

திருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்


ஜூலை,30,2013. பிலிப்பீன்ஸ் மற்றும் இலங்கையிலிருந்து அழைப்பிதழ்கள் வந்திருப்பதால் அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இத்திங்களன்று விமானப் பயணத்தில் பன்னாட்டு நிருபர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ரியோ தெ ஜனெய்ரோவிலிருந்து உரோமைக்குத் திரும்பிய நீண்ட விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு நிருபர்களின் கேள்விகளுக்கு ஒரு மணி, இருபது நிமிட நேரம் பதிலளித்துக் கொண்டுவந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது அடுத்த வெளிநாட்டுத் திருப்பயணங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, 2014ம் ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து சிந்திக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகியோரின் புனிதர்பட்ட விழா, வத்திக்கான் வங்கி, திருப்பீடத் தலைமையகத்தின் சீரமைப்பு, வத்திக்கானில் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த விவகாரம், திருமணம், திருமணமுறிவு, மற்றும் மறுதிருமணம் செய்துள்ளவர்களுக்கு மேய்ப்புப்பணி... இப்படி வத்திக்கான் சார்ந்த பல சூடான விவகாரங்கள் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மிக எளிமையாகத் திறந்த மனத்துடன் பதிலளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பிரேசில் திருப்பயணத்துக்குப் பின்னர் தான் உடலளவில் களைப்பாக இருந்தாலும், ஆன்மீகரீதியில் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், முப்பது இலட்சம் இளையோருடன் தனக்கு மிக நல்ல அனுபவங்கள் கிடைத்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.