2013-07-30 16:09:06

இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள்


ஜூலை,30,2013. சிரியாவில் கடத்திவைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள்
Astalli, Magis உட்பட இத்தாலியில் இயங்கும் இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள், சிரியாவின் Raqqa நகரிலிருந்து கடத்தப்பட்டுள்ள அருள்பணி Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளன.
தமாஸ்கு நகரிலுள்ள திருப்பீடத் தூதரகமும் இவ்வருள்பணியாளர் கடத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளவேளை, இவர் சிரியாவில் இருக்கும்போதெல்லாம் வழக்கமாகத் தன்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் எனவும், ஆனால் கடந்த சில நாள்களாக அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையெனவும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக சிரியாவில் மறைப்பணியாற்றிவரும் அருள்பணி Paolo Dall'Oglio, அந்நாட்டில் ஒப்புரவுக்கும் அமைதிக்கும் உரையாடலுக்கும் முன் நின்று உழைத்து வருபவர்.
அருள்பணி Dall'Oglio காணாமற்போயுள்ள தகவல் தொடர்பாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இயேசு சபையினரின் Astalli என்ற ஆலோசனை மையம், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு சட்டரீதியாக ஆலோசனை வழங்கி அம்மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றது.
Magis என்ற அச்சபையினரின் அரசு சாரா இயக்கமும் புலம்பெயர்ந்தோர்க்கு உதவி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.