2013-07-29 16:43:25

பிரேசிலில் திருப்பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பியுள்ளார் திருத்தந்தை


ஜூலை,29,2013. “செல்லுங்கள், பணிபுரிய அஞ்சாதீர்கள்; நற்செய்தியை எடுத்துச்செல்வது, கடவுள் சக்தியை எடுத்துச் செல்வதாகும்; அச்சக்தியைக் கொண்டு தீமையையும் வன்முறையையும் அடித்து வீழ்த்த முடியும்; தன்னலம், சகிப்பற்றதன்மை, காழ்ப்புணர்வு ஆகியவற்றின் தடைகளை தவிடுபொடியாக்க முடியும்” என்று ஏறக்குறைய முப்பது இலட்சம் உலக இளையோரிடம் சொல்லி இந்த 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளை நிறைவுக்குக் கொண்டுவந்து வத்திக்கான் திரும்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ரியோவிலிருந்து திருத்தந்தையை ஏற்றிவந்த A330 ‘ஆல் இத்தாலியா’ விமானம் இத்திங்கள் உரோம் நேரம் முற்பகல் 11.25 மணிக்கு உரோம் சம்ப்பினோ இராணுவ விமான நிலையத்தில் வந்திறங்கியது. இத்தாலிய உள்துறை அமைச்சர் உட்பட அரசு பிரமுகர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்கள் விமானப்படிகளில் நின்று திருத்தந்தையை வரவேற்றனர். இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களும் திருத்தந்தைக்கு நல்வரவேற்பளிக்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். இத்திருப்பயணத்தில் திருத்தந்தை கூறிய வார்த்தைகள் இளையோர் மற்றும் அனைவரின் இதயங்களைத் தொட்டுள்ளன, உரையாடல், நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுச் செய்திகளை வழங்கியுள்ளன என இத்தாலிய அரசுத்தலைவர் பாராட்டியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், வத்திக்கானுக்குத் திரும்பும் வழியில் புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னைமரிக்கு நன்றி செலுத்தினார் திருத்தந்தை. அச்சமயம் திருத்தந்தையைப் பார்த்த சில இளையோர் ஒரு பந்தையும் ஒரு பனியனையும் அவரிடம் கொடுத்தனர். அவற்றை அன்னைமரிக்கு காணிக்கையாகக் கொடுத்துவிட்டு வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். ரியோவிலிருந்து உரோம் திரும்பும் விமானப் பயணத்தில் தனது வருங்காலத் திருப்பயணங்கள், திருஅவையில் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வங்கிகள் போன்ற சில தலைப்புக்களில் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.