2013-07-29 16:39:40

திருத்தந்தை பிரான்சிஸ்: உலகின் அனைத்து இளையோரிலும் நான் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளேன்


ஜூலை,29,2013. இஞ்ஞாயிறன்று ரியோ விமான நிலையத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில், இத்திருப்பயணம் மிகச் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும், குறிப்பாக, பிரேசில் அரசுத்தலைவர், அரசு மற்றும் தலத்திருஅவை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், திருத்தந்தை இப்பிரியாவிடை உரையில்...
உரோமைக்குத் திரும்பும் இவ்வேளையில் பல மகிழ்ச்சியான நினைவுகளைச் சுமந்து செல்கிறேன். புனித பிரான்சிஸ் மருத்துவமனையில் நான் சந்தித்த இளையோரின் கண்களில் நிறைந்திருந்த நம்பிக்கை, அத்தனை கடினச் சூழ்நிலையிலும், Varginha சேரி மக்கள் காட்டிய விசுவாசம் மற்றும் மகிழ்ச்சி, தன்னார்வப் பணியாளர்கள் காட்டிய ஆர்வம்... இப்படி பலவற்றை மறக்க இயலாது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த இளையோரை வரவேற்று உபசரித்த ஒவ்வொருவருக்கும், ஊடகங்கள் வழியாக இந்நிகழ்வுகளை அறிவித்த அனைவருக்கும், இன்னும், மௌனத்திலும் எளிமையிலும் இந்த உலக தினத்துக்காகச் செபித்த அனைவருக்கும் நன்றி. பிரேசில் அரசுத்தலைவருக்கும் நன்றி. இந்த நாள்களின் கொண்டாட்டங்களின் மையமாக இருந்த இளையோரே, உங்களின் அழகான சாட்சிய வாழ்வுக்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களில் பலர் சீடர்களாக ரியோ வந்தீர்கள். இப்போது மறைபோதகர்களாகத் ரியோவைவிட்டுச் செல்வீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. உங்களின் மகிழ்ச்சியான சாட்சியம் மற்றும் சேவையால் அன்புக் கலாச்சாரம் கட்டியெழுப்பப்பட உதவுங்கள். உன்னதமான இலக்கை அடைய உங்கள் நேரத்தையும் திறமைகளையும் வழங்குவதும், ஒவ்வொரு மனிதரின் மாண்பை ஏற்பதும், கிறிஸ்துவுக்காகவும் அவரின் நற்செய்திக்காகவும் இடர்களை எதிர்நோக்குவதும் தகுதியானது என்பதை உங்கள் வாழ்வால் காட்டுங்கள். கிறிஸ்துவைத் தேடவே நாம் இங்கு வந்தோம். ஏனெனில் அவர் முதலில் நம்மைத் தேடுகிறார். பெரு நகரங்களுக்கும், சிறிய குழுக்களுக்கும் கிராமங்களுக்கும் இவ்வுலகின் ஒவ்வொரு மூலைக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் ஆவலை நம் இதயங்களில் எரியவிடுவது கிறிஸ்துவே. பிரேசில் மற்றும் உலகின் அனைத்து இளையோரிலும் நான் எப்போதும் எனது நம்பிக்கையை வைத்துள்ளேன். இப்பூமியெங்கும் புதுவசந்தம் பரவ இளையோர் வழியாகக் கிறிஸ்து ஏற்பாடு செய்கிறார். அதன் முதல் கனிகளை நான் பார்த்துள்ளேன். மற்றவர்களும் மகிழ்வோடு முழு அறுவடையை நடத்துவார்கள். இறுதியில் எனது எண்ணங்கள் அபரெசிதா அன்னைமரி பக்கம் திரும்புகின்றன. இந்த மனிதக் குடும்பத்துக்காகவும், குறிப்பாக பிரேசிலுக்காகவும் அத்தாயிடம் மண்டியிட்டுச் செபித்தேன். எனக்காக நீங்கள் செபிக்க மறக்க வேண்டாம். திருத்தந்தைக்கு உங்கள் அனைவரின் செபம் தேவைப்படுகின்றது. விரைவில் சந்திப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
ரியோ விமான நிலையத்தில் இவ்வாறு பிரியாவிடை உரை நிகழ்த்தி உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசில் உதவி அரசுத்தலைவர் Michel Temer உட்பட பல அரசு மற்றும் திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தையை உரோமைக்கு வழியனுப்பி வைத்தனர். சிறார் மலர்க் கொத்துக்களைக் கொடுத்து முத்தமிட்டனர். இயேசுவின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும்பொருட்டு அவரின் வாழ்வில் நமது வாழ்வை அமைக்க வேண்டும் என்று இஞ்ஞாயிறன்று தனது டுவிட்டரிலும் எழுதியிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.