2013-07-29 16:46:32

28வது உலக இளையோர் தின தன்னார்வப்பணி இளையோருடன் திருத்தந்தை


ஜூலை,29,2013. நன்றி மறப்பது நன்றல்ல என்பதற்கேற்ப, இஞ்ஞாயிறு மாலை 5.15 மணிக்கு ரியோவின் காங்கிரஸ் அரங்கத்தில் 15 ஆயிரம் தன்னார்வப்பணி இளையோரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த 28வது உலக இளையோர் தினத்துக்கு ஈராண்டுகளாகப் பல்வேறு பணிகளைச் செய்த இப்பணியாளர்கள் அனைவரும் மஞ்சள்நிறப் பனியன்களை உடுத்தியிருந்தனர். இவர்கள் மத்தியில் திறந்த காரில், நின்றுகொண்டே வந்து மேடையில் அமர்ந்தார் திருத்தந்தை. முதலில் ஓர் இளைஞரும், பின்னர் ஓர் இளம்பெண்ணும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசி ஆசீர் பெற்றனர். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இப்பணியாளர்களின் மனத்தாராளத்தைப் பாராட்டிப் பேசினார்.
தன்னார்வப் பணியாளர்கள் இத்திருப்பயண நாள்களில் செய்த பணிகளைப் பார்த்தபோது, இயேசுவின் வழியைத் தயார் செய்த புனித திருமுழுக்கு யோவானின் திருப்பணியை நினைவுபடுத்தியது. நீங்களும், ஆயிரக்கணக்கான இளையோர் இயேசுவை சந்திப்பதற்கு வழியைத் தயார் செய்தீர்கள். கடவுள் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் வைத்துள்ளார். திருமணத் திருவருள்சாதனத்தில், குடும்ப வாழ்வு வழியாகப் புனிதமாக வாழ சிலரைக் கடவுள் அழைக்கிறார். திருமணம் இக்காலத்துக்கு ஒவ்வாதது. வாழ்வு முழுவதும் நிலையான பற்றுறுதியுடன் வாழ்வதாக உறுதி எடுப்பது சரியல்ல, ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என்று சொல்பவர்கள் இக்காலத்தில் உள்ளனர். ஆனால் நீங்கள் இவர்களுக்கு எதிரான புரட்சியாளர்களாக இருங்கள், இக்காலத்தின் போக்குக்கு எதிராக நீந்துங்கள் என நான் உங்களிடம் கேட்கிறேன். ஆம். எல்லாவற்றையும் நிரந்தரமற்ற இதனை நோக்கும் இத்தகைய கலாச்சாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுங்கள். உண்மையான அன்பு செய்யவும், பொறுப்பை ஏற்கவும் திறனற்றவர்கள் என்ற எண்ணத்துக்கு எதிராகப் புரட்சி செய்யுங்கள். இக்கால அலைகளுக்கு எதிராக நீந்துவதற்கும், மகிழ்ச்சியாக இருக்கவும் துணிவு கொள்ளுங்கள்.
இவ்வாறு திருத்தந்தை உரக்க, திரும்பத் திரும்பச் சொன்னபோது 15 ஆயிரம் பணியாளர்களும், அவ்வாறே நாங்கள் வாழ்வோம் என உரக்கச் சொன்னார்கள். மேலும் அவர்களிடம் பேசினார் திருத்தந்தை
உங்களில் சிலர் குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு அழைக்கப்படலாம். கடவுள் உங்களிடம் கேட்பதற்குப் பதிலுரைக்கப் பயப்படாதீர்கள். கடவுளின் அழைப்புக்கு “ஆகட்டும்” என்று சொல்வது மதிப்புமிக்கது. அவரில் நாம் மகிழ்வைக் காண்கிறோம். அன்பு இளையோரே, உங்கள் வாழ்வில் என்ன செய்வதென்று இன்னும் சிலர் அறியாதிருக்கலாம். ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு வழியைக் காட்டுவார். ஆண்டவரே, நான் எந்த வழியைத் தேர்ந்து கொள்ள வேண்டும், ஆண்டவரே என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர் என்று சிறுவன் சாமுவேல் போல் கேளுங்கள்
என்று 15 ஆயிரம் தன்னார்வ இளையோர் தொண்டர்களிடம் கூறி அவர்களோடு சேர்ந்து செபித்து ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அவர்கள் அன்னைமரியா திருவுருவம் ஒன்றை அவருக்கு வெகுமதியாக அளித்தனர். இவ்வரங்கத்துக்கு வருமுன்னர் திறந்த காரைவிட்டு இறங்கும்போது தனது கைப்பையை தானே தூக்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்நிகழ்ச்சி முடிந்து செல்லும்போதும் மறக்காமல் அதைக் கேட்டு வாங்கி எடுத்துச் சென்றார். இளையோர், “திருத்தந்தையே நாங்கள் உம்மை அன்பு செய்கிறோம், நீவீர் வாழ்க! வாழ்க!” என்று சப்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர்.







All the contents on this site are copyrighted ©.