2013-07-28 16:43:22

பன்முகம் கொண்ட பிரேசில் நாடு, அரியதொரு கருவூலமாகவும், அதேநேரம், சவாலாகவும் விளங்குகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,28,2013. ஜூலை 27, சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில், பிரேசில் ஆயர் பேரவையின் கர்தினால்கள், ஆயர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:

என் சகோதர ஆயர்களே,
உங்கள் மத்தியில் ஒரு நண்பனாக என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். Rio நகரில் கூடியுள்ள இளையோர் நம் வழிநடத்துதலைத் தேடி, காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில் நான் சொல்லவிழைவது, Aparecida அன்னை மரியா திருத்தலத்தில் என் மனதில் ஓடிய எண்ணங்கள்... அன்னையின் திருத்தலத்தில் உங்கள் அனைவரையும், உங்கள் தலத்திருஅவை, அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரையும் இறைவனுக்கு அர்ப்பணித்தேன். சிறப்பாக, வயது முதிர்ந்தோரையும், இளையோரையும் அர்ப்பணித்தேன். கொள்கைப்பிடிப்பு, வலிமை ஆகியவற்றை ஏந்திச்செல்லும் இளையோரும், நினைவுகளையும், அறிவாற்றலையும் பேணிக்காக்கும் முதியோரும் நம் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்.

இவ்வாறு தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை, ஆயர்களிடம் நான்கு முக்கிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்:
1. Aparecida: திருஅவையின் மறைபரப்புப் பணிக்கு முக்கிய வழிகாட்டி.
2. பிரேசில் தலத்திருஅவை இதுவரை கடந்துவந்த வரலாற்றுப் பாதைக்குப் பாராட்டு.
3. எம்மாவுஸ் அனுபவம் என்ற குறியீடு, இன்றையச் சூழலையும் வருங்காலத்தையும் மதிப்பிட முக்கியமானது.
4. பிரேசில் தலத்திருஅவை சந்திக்கும் சவால்கள்.

இந்த நான்காவது பகுதியில் அவர் ஐந்து சவால்களை வரிசைப்படுத்தினார்.


இறுதியாக, அவர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்:
பன்முகம் கொண்ட பிரேசில் நாடு, அரியதொரு கருவூலமாகவும், அதேநேரம், சவாலாகவும் விளங்குகிறது. சமுதாயத்தின் வேறுபட்ட அம்சங்களை ஒருங்கிணைத்து, அவற்றுக்குள் நல்லுணர்வை வளர்ப்பதே நமது கடமை. அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, ஒரேவிதமாக மாற்றுவது நமது பணி அல்ல. பரந்துபட்ட இந்நாட்டில் வாழும் அனைவரையும் இறைவனிடம் அழைத்துவரும் பயணத்தில் கிறிஸ்து உங்களுக்குத் தேவையான அருளை வழங்குவாராக.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.