2013-07-28 16:45:29

திருத்தந்தை பிரான்சிஸ் - இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவை. இன்றும் கிறிஸ்து உங்களை அழைக்கிறார்


ஜூலை,28,2013. 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மற்றுமொரு முக்கியமான நிகழ்வாக ஜூலை 27 மாலை 7.30 மணியளவில் Copacabana கடற்கரையில் திருவிழிப்புச் சடங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு வழங்கிய உரை:

என் அன்புக்குரிய இளைய நண்பர்களே,

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு தற்போது நினைவுகூர்ந்தோம். சிலுவையின் முன் நின்ற பிரான்சிஸ், இயேசுவின் குரலைக் கேட்டார்: "பிரான்சிஸ், என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவாய்." இளையவரான பிரான்சிஸ் அக்கட்டளையை உடனடியாக, தாராள மனதோடு ஏற்றார். எந்த இல்லத்தைக் கட்டியெழுப்புவது என்ற கேள்வி எழுந்தது. கற்களால் ஆன ஒரு கட்டிடத்தை அல்ல, மாறாக, திருஅவையின் வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை பிரான்சிஸ் உணர்ந்தார். கிறிஸ்துவின் முகம், திருஅவையிடம் இன்னும் தெளிவாக ஒளிரும்படி செய்வதே அப்பணி என்பதை அவர் உணர்ந்தார்.
இன்றும் இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவை. இன்றும் கிறிஸ்து உங்களை அழைக்கிறார், தன்னைப் பின் தொடர, திருஅவையின் பணியாளராக மாற. இது எவ்வகையில் சாத்தியம்? நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கிறிஸ்துவின் சீடராக, மறை பணியாளராக வாழ்வது எப்படி என்பதை மூன்று உருவகங்கள் வழியே எண்ணிப் பார்க்கிறேன்: இடம் என்றால், விதைகளைப் பயிரிடும் நிலமாக, பயிற்சிபெறும் விளையாட்டுத் திடலாக, கட்டிடங்கள் எழுப்பப்படும் இடமாக இருக்கலாம்.

1. விதைகளைப் பயிரிடும் நிலம் - இயேசு கூறிய விதை விதைப்பவர் உவமை நாம் அனைவரும் அறிந்ததே. விதைப்பவர் விதைத்த விதைகளில் சில பாதையோரத்தில், பாறை நிலத்தில், முட்புதர்களில் விழுந்து, வளரமுடியாமல் போயின; ஏனையவை, நல்ல நிலத்தில் விழுந்து பலன் தந்தன (காண்க. மத். 13: 1-9). விதை என்பது இறைவனின் வார்த்தை என்று இயேசு விளக்கம் தருகிறார் (காண்க. மத். 13: 18-23).
அன்புள்ள இளையோரே, இந்த நிலம் உங்கள் இதயம், உங்கள் வாழ்வு. உங்கள் வாழ்வில் இயேசு தன் வார்த்தைகள் வழியாக நுழைய விழைகிறார். உங்கள் வாழ்வில் கிறிஸ்துவின் வார்த்தைகள் நுழையவும், மலரவும் அனுமதி தாருங்கள்.
பாதையோரத்தில், பாறை நிலத்தில், முட்புதரில் விழுந்த விதை பலன் தரவில்லை என்று இயேசு சொல்கிறார். நாம் எவ்வகை நிலமாக இருக்கிறோம்? எவ்வகை நிலமாக இருக்க விரும்புகிறோம்? சில வேளைகளில் பாதையோர நிலமாய் இருக்கிறோம். பல்வேறு குரல்கள் நம்மை பல திசைகளிலும் திருப்ப அனுமதிக்கிறோம். சிலவேளைகளில் பாறை நிலமாய் இருக்கிறோம். இறைவார்த்தையைக் கேட்டதும் ஆர்வத்தோடு ஏற்கிறோம்; ஆனால், கடினமானச் சூழல்களில் தடுமாறுகிறோம். அடித்துச் செல்லும் வெள்ளத்திற்கு எதிராக நீந்த நாம் துணிவு கொள்வதில்லை. எதிர்மறையான எண்ணங்களும் உணர்வுகளும் முட்புதர்களாய் நம்மைச் சூழ்ந்து, நாம் மூச்சிழந்துபோக அனுமதிக்கிறோம்.
இன்று, இந்த விதை நல்ல நிலத்தில் விழுகின்றது என்பது என் திண்ணம். நீங்கள் பாதிநேர கிறிஸ்தவர்களாக, மேலோட்டமான கிறிஸ்தவர்களாக இல்லாமல், நல்ல நிலமாக விளங்க விரும்புகிறீர்கள் என்று உறுதியாக அறிவேன். தவறான சுதந்திரத்தைத் தேடித் போகாமல், உயர்ந்த, நீடித்து நிலைக்கும் முடிவுகள் எடுக்க நீங்கள் முயல்கிறீர்கள். இத்தகு இயேசு துணை நிற்கிறார். அவரே நம்மை வழிநடத்த அனுமதிப்போம்!

2. பயிற்சிபெறும் விளையாட்டுத் திடல் - தன் குழவில் இணைந்து விளையாட, தன் சீடராக இருக்க இயேசு உங்களை அழைக்கிறார். உங்களில் பலர் விளையாட்டுக்களை விரும்புபவர்கள் என்று நினைக்கிறேன். பிரேசில் நாட்டில் கால்பந்து ஒரு தேசிய உணர்வு. ஒரு விளையாட்டுக் குழுவில் இணைய விரும்பும் வீரரிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? அதிகமாகப் பயிற்சி பெறுவதற்கு அவர் தயாராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆண்டவரின் சீடராக இருப்பதற்கும் இதேத் தேவை உள்ளது. புனித பவுல் அடியார் நம்மிடம் சொல்வது இதுதான்: பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். (1 கொரி. 9: 25)
உலகக் கால்பந்து கோப்பையைவிட உயர்ந்ததொன்றை இயேசு நமக்குத்தர விழைகிறார். நிறைவான, பலன்கள் மிகுந்த வாழ்வை, எதிர்காலத்தை இயேசு தருகிறார். அவர் தரும் வாழ்வு முடிவற்றது. அந்த வாழ்வைப் பெற நாம் பயிற்சிபெற்று நம்மைத் தகுதி உடையவர்களாக மாற்றும்படி இயேசு கேட்கிறார். வாழ்வின் எந்தச் சூழலிலும் மனம் தளராது, நம்பிக்கைக்குச் சாட்சியாக வாழ இயேசு அழைக்கிறார். நம்மையே தகுதி உடையவராக மாற்றுவது எப்படி? அவருடன் செபத்தில் இணைவதன் மூலம்... திருவருட் சாதனங்களைப் பெறுவதன் மூலம்... ஒருவரை ஒருவர் அன்புகூர்ந்து, மன்னித்து, ஏற்று, உதவி செய்து வாழ்வதன் மூலம்... அன்புள்ள இளையோரே, கிறிஸ்துவின் உண்மையான விளையாட்டு வீரர்களாக வாழுங்கள்!

3. கட்டிடம் எழுப்பப்படும் இடம் - கிறிஸ்துவின் திருஅவையில் நாம் அனைவரும் உயிருள்ள கற்கள் (காண்க. 1 பேதுரு 2:5) இயேசு இந்தத் திருஅவையைக் கட்டியெழுப்பச் சொல்கிறார். ஒருசிலர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிற்றாலயமாக அல்ல, மாறாக, மனித சமுதாயம் அனைத்தையும் வரவேற்கும் ஓர் இல்லமாக அமையும் பெரியதோர் ஆலயத்தை எழுப்பச் சொல்கிறார்.
உயர்ந்ததோர் உலகைக் கட்டியெழுப்பும் ஆசை உங்கள் அனைவரிடமும் உள்ளது. நீதியான, அன்பான சமுதாயம் உருவாகவேண்டும் என்ற ஆவலில், உலகின் பல பகுதிகளிலும் இளையோர் தெருக்களுக்கு வந்துள்ள செய்திகளை நான் ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனித்து வருகிறேன். இத்தகைய சமுதாயம் அமைய எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எழுகிறது. நீதி நிறைந்த சமுதாயம் அமைய எது அளவுகோல்? திருஅவையைப் பொருத்தவரை எது மாறவேண்டும் என்று ஒரு முறை அன்னை தெரேசா அவர்களிடம் கேள்வி கேட்டபோது, அன்னை சொன்ன பதில்: நீங்களும், நானும்!

அன்பு நண்பர்களே, நீங்களே விசுவாசத்தின் விளைநிலம்! நீங்களே கிறிஸ்துவின் அணியில் உள்ள விளையாட்டு வீரர்கள்! இன்னும் அழகியதொரு திருஅவையை, உயர்ந்ததோர் உலகை உருவாக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்!

நமது பார்வையை அன்னை மரியாவை நோக்கித் திருப்புவோம்! இறைவனுக்கு 'ஆம்' என்றுரைத்த அவர், இயேசுவைப் பின்தொடர நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்.” (லூக்கா 1: 38) மரியாவுடன் இணைந்து நாமும் சொல்வோம்: "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!" ஆமென்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.