2013-07-28 14:47:49

28வது உலக இளையோர் தினம் நிறைவு


ஜூலை,28,2013. இஞ்ஞாயிறு, 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் நிறைவு நாள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற தலைப்பில் பிரேசில் நாட்டு ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெற்றுவரும் இந்த ஒரு வார இளையோர் விழாவின் நிறைவு நாள். இத்திருப்பயண நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவில் தங்கும் சுமாரேயிலுள்ள ரியோ பேராயரின் தனிப்பட்ட இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.20 மணிக்கு இத்திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். அப்போது இந்திய-இலங்கை நேரம் இஞ்ஞாயிறு மாலை 4.50 மணியாகும். சுமாரேயிலிருந்து கெலிகாப்டரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ், கோப்பகபானா கடற்கரையில் வந்திறங்கினார். பின்னர் அவர் திறந்த காரில் ஏறி, அங்கு ஆரவாரத்தோடு ஆடல்பாடல்களுடன் கூடியிருந்த 20 இலட்சத்துக்கு மேற்பட்ட 180க்கும் மேற்பட்ட நாடுகளின் இளையோர் மத்தியில் வலம் வந்தார். இந்நாள் நிறைவு நாள் என்பதால் இளையோரின் மகிழ்ச்சி ஆரவாரம் உச்சத்தில் இருந்தது. விழா மேடைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், நிறைவு விழாத் திருப்பலியைத் தொடங்கினார். 28வது உலக இளையோர் தினப் பாடலைப் பாடகர் குழு முதலில் பாடியது.
பிரேசில் அரசுத்தலைவர் Dilma Rousseffன் அழைப்பின்பேரில், அர்ஜென்டினா, பொலிவியா, சுரினாம் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களும், உருகுவாய், பானமா ஆகிய நாடுகளின் உதவி அரசுத்தலைவர்களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். ரியோ பேராயர் தெம்பெஸ்தா, இத்திருப்பலியின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருப்பலி தொடர்ந்து நடந்தது. இந்த உலக இளையோர் தினத்தின் தலைப்பை மையமாக வைத்து மறையுரையாற்றினார் திருத்தந்தை. ரியோ புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு முன்பாக தான் சந்தித்த நோயாளிச் சிறுமியை இத்திருப்பலிக்குக் கொண்டுவருமாறு திருத்தந்தையே விரும்பிக் கேட்டுக்கொண்டதால், இத்திருப்பலியில் காணிக்கைப் பவனியின்போது அச்சிறுமியைத் தூக்கிச் சென்றனர். பிறவியிலேயே மூளையின் பெரும்பகுதி இல்லாமல் பிறந்த இச்சிறுமியை நாங்கள் சட்டப்படி கருக்கலைப்பு செய்திருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யாமல் அச்சிறுமியை வளர்த்து வருவதாக அச்சிறுமியின் பெற்றோர் திருத்தந்தையிடம் கூறினர்.
இத்திருப்பலியின் இறுதியில், திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ரில்கோ பேசினார். இத்திருப்பீட அவைதான் உலக இளையோர் தினங்களை ஏற்பாடு செய்து நடத்துகிறது. ரியோவின் கோர்க்கோவாதோ கிறிஸ்து மீட்பர் திருவுருவம் போன்ற சிறிய திருவுருவங்களையும், ஒரு சிறிய செப புத்தகத்தையும் ஐந்து இளம் தம்பதியருக்குக் கொடுத்து அவர்களின் நற்செய்திப் பணியை ஊக்குவித்தார் திருத்தந்தை. பின்னர் அடுத்த உலக இளையோர் தினம், 2016ம் ஆண்டில் போலந்து நாட்டின் Krakowவில் நடைபெறும் என்பதையும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது கைதட்டுகள் மேகங்களை ஊடுருவிச் சென்றன.
இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் ஒத்துழைப்புக் குழுவை சந்தித்தல், இவ்வுலக தினத் தன்னார்வப் பணியாளர்களைச் சந்தித்தல், ரியோ தெ ஜனெய்ரோ விமான நிலையத்தில் பிரியாவிடை ஆகியவை இத்திருப்பயணத்தின் இஞ்ஞாயிறு நிகழ்வுகளாகும். பிரேசில் நாட்டுக்கான ஒருவாரத் திருப்பயணத்தை நிறைவுசெய்து, இத்திங்கள் முற்பகல் 11.30 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்







All the contents on this site are copyrighted ©.