2013-07-28 14:50:25

28வது உலக இளையோர் தின நிகழ்வுகள்


ஜூலை,28,2013.இச்சனிக்கிழமை 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் திருவிழிப்பு நாள் அல்லது இவ்வுலக நாளின் நிறைவுக்கு முந்தைய நாள். அன்று உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு அதாவது இந்திய நேரம், இஞ்ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு கோப்பகபானா கடற்கரையில் இளையோருடன் திருவிழிப்பு திருவழிபாட்டில் கலந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்றைய நாளில், Pope Francis ‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், அன்பு இளையோர் நண்பர்களே, ஒவ்வொரு நாளும் செபிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதுதான் இயேசுவை அறிவதற்கும், அவரை உங்கள் வாழ்வில் அழைப்பதற்கும் வழியாகும் என்று எழுதியிருந்தார்.
அந்த அட்லாண்டிக் பெருங்கடல் கடற்கரையில் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு நெருக்கமாக அமர்ந்திருந்த ஏறக்குறைய இருபது இலட்சம் இளையோர் மத்தியில் திறந்த காரில் நின்று கொண்டே வந்த திருத்தந்தை பிரான்சிஸ், இருபக்கங்களிலும் கைகளை ஆட்டி இளையோரை உற்சாகப்படுத்தினார். குழந்தைகளை முத்தமிட்டார். அக்கூட்டத்தில் ஓர் இளைஞர் கொடுத்த மெக்சிகோ நாட்டுத் தொப்பி ஒன்றைத் தலையில் வைத்திருந்து பின்னர் அந்த இளைஞரிடமே திரும்பக் கொடுத்தார். அவ்விளையோர் வைத்திருந்த மத்தளத்தில் காரில் நின்றபடியே தட்டி மகிழ்ச்சிப்படுத்தினார். மொத்தத்தில் அவரது திறந்த வாகனம் மேடையை வந்து சேர்ந்தபோது அவ்வாகனம் கால்பந்து விளையாட்டுப் பனியன்களும், கொடிகளும், மலர்களுமாக நிறைந்திருந்தது. உலக இளையோர் தினச் சிலுவையை பல இளையோர் தூக்கிச் சென்று முதலில் பீடத்தில் வைத்தனர். போய், எனது திருஅவையைக் கட்டு என்று, அசிசியின் புனித தமியான ஆலயத்தில் புனித பிரான்சிஸ்க்குக்கு இயேசு கூறியதுபோல, இவ்விளையோர் தின திருவிழிப்பு வழிபாட்டில் இளையோர் திருத்தந்தையின் முன்னிலையில் ஒரு வீட்டைக் கட்டிக் காண்பித்தனர். செபம், தியானம், பாடல்கள், நான்கு இளையோரின் சாட்சியங்கள் ஆகியவை இவ்வழிபாட்டில் நிகழ்ந்தன. சக்கர நாற்காலியில் வந்திருந்த பிரேசில் நாட்டு 23 வயது பிலிப்பே பகிர்ந்து கொண்டது அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
கடற்கரையில் பலவண்ணக் கம்பளம் விரித்தாற்போல அமர்ந்திருந்த 20 இலட்சம் இளையோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையில் கிறிஸ்துவைப் பின்பற்ற செபம், திருவருள்சாதனங்கள், பிறருக்கு உதவுதல் ஆகிய ஆன்மீகப் பயிற்சிகள் தேவை என்று சொல்லி இவற்றை அங்கிருந்த அத்தனை இளையோரையும் திரும்பத் திரும்பச் சப்தமாகச் சொல்ல வைத்தார். கத்தோலிக்கத் திருஅவையில் இதுவரையில் நடந்துள்ள உலக இளையோர் தினங்களில் தற்போது ரியோவில் இடம்பெற்றதே மிகப் பிரமாண்டமானது என அனைவரும் சொல்கின்றனர். இளையோரின் எண்ணிக்கை 30 இலட்சம் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இச்சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 7.45 மணியளவில் ரியோ தெ ஜனெய்ரோ மாநகர நாடக-இசை அரங்கில், அரசியல்வாதிகள், பல்வேறு சமயத் தலைவர்கள், பழங்குடி இனத் தலைவர்கள், வணிகர்கள், கலாச்சாரத் தலைவர்கள், பேராசிரியர்கள் போன்றோரைச் சந்தித்தார். இசைக்குழு முதலில் காதுக்கினிய பாடலைப் பாடியது. எதிர்பாராத நேரத்தில் சிறுமிகள் குழு ஒன்று மேடையில் திருத்தந்தை அமர்ந்திருந்த நாற்காலியைச் சுற்றி அமர்ந்தது. ஒரு 2 வயதுச் சிறுமி கையில் மஞ்சள் நிற மமோசா மலர்க்கொத்துடன் வந்து திருத்தந்தையிடம் கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்தார்.
இவ்வரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரைக்குப் பின்னர் பழங்குடி இனக்குடும்பம் ஒன்று திருத்தந்தையிடம் சென்று ஆசீர் பெற்றது. அவர்களின் நெற்றியில் சிலுவை வரைந்து கட்டி அரவணைத்து ஆறுதல் கூறினார் திருத்தந்தை. அக்குடும்பத்தில் ஒருவர் தனது தொப்பியை எடுத்து திருத்தந்தையிடம் கொடுக்க, அவரும் அதனைத் தனது தலையில் வைத்துக் கொண்டார். பின்னர் அதனை அந்தப் பழங்குடி இனத்தவர் தலையில் வைத்துவிட்டார். அங்கு அமர்ந்திருந்த சிறுமிகளை எழுப்பி ஒவ்வொருவரையும் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மீண்டும் அவ்வரங்கத்தில் இனிமையான பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.
இச்சந்திப்புக்குப் பின்னர் புனித சுவக்கீன் பேராயர் இல்லம் சென்று 300க்கும் மேற்பட்ட பிரேசில் ஆயர்களுடன் மதிய உணவருந்தி அவர்களுக்கு நீண்ட உரையொன்றும் நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதை ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கினார். ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆயர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை.
ஆயர்கள், பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வளர்க்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இளையோர், உண்மையான கிறிஸ்தவ சமுதாயத்தை உயிரூட்டமுடன் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இளையோரே, வருங்காலத்தைக் கட்டியெழுப்புங்கள், வாழ்வதற்கு ஏற்ற இடமாக உலகை மாற்றுங்கள் என்ற திருத்தந்தை அவர்களின் ஆவலை உலகின் கிறிஸ்தவ இளையோர் செயல்படுத்துவார்கள் என நம்புவோம்.








All the contents on this site are copyrighted ©.