2013-07-27 16:33:18

மதமாற்றம் தொடர்பில் மலேசியாவில் முக்கிய தீர்ப்பு


ஜூலை,27,2013. பெற்றோர் இருவரின் சம்மதமின்றி இனி பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியாது என்று, மலேசியாவில் மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அந்நாட்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி என்கிற பெண்மணியின் கணவர் அவர்களது மூன்று ஆண் பிள்ளைகளை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இப்போது அந்நாட்டின் இபோஃஹ்விலுள்ள உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
தாயின் அனுமதி பெறாமல் இந்த மதமாற்றம் இடம்பெற்றுள்ளது என்றும், அவ்வாறு நடைபெற்றபோது பிள்ளைகள் 18 வயதுக்கு கீழே இருந்தார்கள் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லீ ஸ்வீ செங், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பெற்றோர் என்றால் இருவரும் சேர்ந்ததே என்றும், எனவே தாயின் அனுமதியின்றி தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது செல்லாது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, மலேசிய வரலாற்றில் முக்கியமான ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.