2013-07-27 16:48:42

28வது உலக இளையோர் தின நிகழ்வுகள்


ஜூலை,27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதல் வெளிநாட்டுத் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இளையோர். 28வது உலக இளையோர் தினத்தைச் சுட்டிக்காட்டும் பனியன்களையும், தொப்பிகளையும் போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் நாடுகளின் கொடிகளையும் பிடித்துக்கொண்டு இலட்சக்கணக்கான இளையோர் நகரில் நடமாடும் காட்சி அனைவரையும் இளமைத் துடிப்புடன் வாழத் தூண்டியுள்ளது. ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயிலிருந்து இவ்வுலக இளையோர் தினத்தில் கலந்து கொள்ளும் 169 இளையோரில் ஒருவரான ஆன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜிம்பாபுவேயில் எங்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஒருவரையொருவர் அன்பு கூரவும், பல்வேறு கலாச்சார மக்களை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக் கொண்டேன். கிறிஸ்தவராய் இருப்பதில் பெருமையடைகிறேன்
ரியோ நகரில் இவ்வுலக இளையோர் தினத்தில் கலந்துகொண்டுவரும் இளையோர் பலரின் அனுபவமும் இப்படித்தான் இருக்கின்றது. இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் பகல் ஒரு மணிக்கு ரியோ நகர் புனித சுவக்கீன் பேராயர் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மதிய உணவு அருந்திய பல்வேறு நாடுகளைச் சார்ந்த 14 இளையோரின் அனுபவங்களைக் கேட்டாலே நமக்கு இது புரிந்துவிடும். இம்மதிய உணவின்போது ஒரு மேஜையில் திருத்தந்தையும், மற்றொரு மேஜையில் ரியோ பேராயர் ஒரானி தெம்பெஸ்தாவும் அமர்ந்திருந்தனர். இவ்விருவர் அருகிலும் ஏழு ஏழு பேராக அமர்ந்தனர். இந்தியாவில் பிறந்து நியுசிலாந்தில் ஊடக பொறியியலாளராக வேலை செய்யும் 27 வயது Thomson Philip என்ற இளைஞருக்கு திருத்தந்தையின் இடது பக்கத்தில் அமர்ந்து உணவருந்தும் நற்பேறு கிடைத்தது. Philip சொல்கிறார்...
திருத்தந்தைக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டது கிடைத்தற்கரிய பேறு. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். இது எனது வாழ்வின் மிகச்சிறந்த அனுபவம். இம்மதிய உணவின்போது திருத்தந்தை எங்களிடம், கிறிஸ்துவின் நம்பிக்கையை மற்றவர்க்கு அறிவிக்கவும், செபம் செய்யவும், சமுதாயத்தில் பணி செய்யவும் சொன்னார். அதோடு அவர், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். திருத்தந்தை எங்களிடம் பெரிய காரியங்களைக் கேட்கவில்லை, ஆனால், நாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நன்றாகச் செய்யச் சொன்னார்.
இதேபோல் திருத்தந்தையோடு மதிய உணவருந்திய மெக்சிகோ நாட்டு Luis Edmundo Martinez, திருத்தந்தையோடு நிறைய நேரம் செலவழித்து நாங்கள் விரும்பியதைக் கேட்க முடிந்தது என்று கூறினார். இளையோர் திருத்தந்தையோடு மதிய உணவருந்துவது உலக இளையோர் தின நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், திருத்தந்தை, இளையோருடன் மதிய உணவை உண்பதற்கு முன்னர் ரியோ பேராயர் இல்லத்தின் பால்கனியில் நின்று நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்கினார். இவ்வெள்ளி, அன்னைமரியின் பெற்றோராகிய புனிதர்கள் சுவக்கீன், அன்னம்மாள் திருவிழா. நம் அனைவரின் தாத்தா பாட்டி விழாநாளில், முதியோரின் ஞானத்தால் இளையோர் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மூவேளை செப உரையைக் கேட்பதற்காக இவ்வில்லத்தின் முன்னர் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்த்திய பின்னர், 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நிர்வாகக் குழுவினர் மற்றும் நன்கொடையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1918ம் ஆண்டில் கட்டப்பட்ட புனித சுவக்கீன் பேராயர் இல்லம், ரியோவின் முதல் பேராயர் கர்தினால் சுவக்கீன் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்னர், இப்பேராயர் இல்லத்தில், ரியோவின் நான்கு சிறைகளிலிருந்து ஆறு சிறுவர்கள், 2 சிறுமிகள் என எட்டு இளம் கைதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தப் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தின்போது சிறைக்கைதிகளைச் சந்திப்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே விரும்பிக் கேட்டுக்கொண்டார் என்பதும், இவர் அர்ஜென்டினாவில் பணியாற்றியபோது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னாள் சிறைக்கைதிகளைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாண்டு புனித வியாழனன்று உரோம் இளம்குற்றவாளிகள் சிறைக்குச் சென்று பாதங்களைக் கழுவினார் என்பதை அனைவரும் அறிவோம்.
இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இவ்வெள்ளி இரவு 8 மணிக்கு ரியோ தெ ஜனெய்ரோ பேராயர் இல்லத்தில் சந்தித்த 8 இளம்குற்றவாளிகள் துணிச்சலுடன் எதிர்காலத்தை நோக்குமாறு பரிந்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த எட்டுக் கைதிகளில் ஒரு சிறுமி, தனது கழுத்து நிறையச் செபமாலைகளைப் போட்டுக்கொண்டு வந்திருந்தார். திருத்தந்தையிடம் ஆசீர்பெற்று, மற்ற தனது நண்பர் கைதிகளுக்குக் கொடுப்பதற்காக அவைகளைப் போட்டிருந்தார். கைதிகளின் பெயரால் ஒரு கடிதத்தையும் அச்சிறுமி திருத்தந்தையிடம் வாசித்து தானே இயற்றிய ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். கைதிகள் செய்த ஒரு பிரமாண்டமான செபமாலையை இக்கைதிகள் திருத்தந்தைக்குப் பரிசாகக் கொடுத்தனர். இது சாதாரண செபமாலை அல்ல. இச்செபமாலையின் சிலுவையில், “Candelària nunca màs” அதாவது, Candelària ஒருபோதும் நிகழக்கூடாது என எழுதப்பட்டிருந்தது. Candelària ஆலயத்துக்கு முன்பாக தூங்கிக் கொண்டிருந்த 11க்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட எட்டுத் தெருச் சிறார், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 1993ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியன்று மரணப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சிறாரின் பெயர்கள் இச்செபமாலை மணிகளில் எழுதப்பட்டுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கைதிகள் கொண்டுவந்திருந்த செபமாலை போன்ற திருப்பொருள்களை ஆசீர்வதித்தார். இவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். மேலும், இவ்வெள்ளியன்று Quinta da Boa Vista பூங்காவில், இஸ்பானியம், இத்தாலியம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளில் மூன்று இளைஞிகள் மற்றும் இரு இளைஞர்களிடம் ஒப்புரவு அருள்சாதனத்தையும் கேட்டார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் போன்ற நலிந்த மக்கள்மீது மிகுந்த அக்கறையும் கருணையும் கொண்டவர் என்பதை ரியோ தெ ஜனெய்ரோவில் அவரின் இத்திருப்பயண நிகழ்வுகள் எண்பித்து வருகின்றன. இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு கோப்பகபானா கடற்கரையில் மற்றுமொரு உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வெள்ளியன்று ரியோ பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்திய பின்னர் சுமாரே சென்று சிறிதுநேரம் ஓய்வெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், மாலை 5 மணிக்கு கோப்பகபானாவுக்கு கெலிகாப்டரில் வந்தார். பின்னர் கோப்பகபானா கடற்கரைக்குச் செல்வதற்காகத் திறந்த காரில் நீண்ட தூரம் சென்றார். சாலையின் இரு பக்கங்களிலும் இளைஞர் வெள்ளம். திருத்தந்தை பிரான்சிஸ் இரு பக்கங்களிலும் கைகளை அசைத்து, இளையோர் கொடுத்தப் பரிசுப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு இளையோரின் ஆரவாரத்துக்கு மத்தியில் கோப்பகபானா கடற்கரை சென்றடைந்தார். அங்கு சிலுவைப்பாதை பக்திமுயற்சியைத் தொடங்கி வைத்தார்.
நான்கு கிலோ மீட்டர் நீளமுடைய கோப்பகபானா அட்லாண்டிக் பெருங்கடல் கடற்கரை வழியாக இயேசுவின் சிலுவைப்பாதையின் 14 நிலைகளில் 13, பிரேசிலின் தன்னார்வத் தொண்டர்கள், கலைஞர்கள் என பிரேசில், புவர்த்தோ ரிக்கோ, மெக்சிகோ, அர்ஜென்டினா, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த 280 பேரால் நாடகப் பாணியில் செய்து காட்டப்பட்டன. 14வது நிலை திருத்தந்தை அமர்ந்திருந்த மேடையில் இடம்பெற்றது. 30 இளையோர், உலக இளையோர் தினச் சிலுவையை முதலில் தூக்கிச் சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து 200 இளையோர் பல நாடுகளின் கொடிகளைப் பிடித்துக்கொண்டு சென்றனர். இப்பக்திமுயற்சியில் ஏறக்குறைய 15 இலட்சம் பேர் பங்கு பெற்றனர். இச்சிலுவைப்பாதை பக்திமுயற்சியில் திருத்தந்தை, இயேசுவின் சிலுவை கற்றுத்தரும் பாடத்தின் பாதையில் செல்ல அழைப்புவிடுத்தார்.
சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலையும் இக்காலத்தில் இளையோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இருந்தது. 14 நிலைகளும், மறைபோதகத்தன்மை, மனமாற்றம், குழுவாழ்வு, இளம்தாய்மார், குருத்துவமாணவர், மனிதவாழ்வைப் பாதுகாத்தல், தம்பதியர், துன்புறும் பெண்கள், மாணவர்கள், கைதிகள், தீரா நோய்கள், உலகின் இளையோர், இளையோரின் இறப்பு என பல தலைப்புக்களில் இடம்பெற்றன. சிலுவைப்பாதை பக்திமுயற்சியே இவ்வெள்ளிதினத் திருப்பயண நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாகும்.







All the contents on this site are copyrighted ©.