2013-07-26 16:31:48

உலக இளையோர் திருத்தந்தைக்கு வரவேற்பு


ஜூலை,26,2013 நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற தலைப்பில் பிரேசில் நாட்டு ரியோ தெ ஜெனெய்ரோவில் இச்செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் இவ்வியாழன் மாலையிலிருந்து களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. இவ்வியாழன் மாலை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு சுமாரேயிலிருந்து Copacabanaவுக்கு கெல்காப்டரில் பயணம் செய்து, பின்னர் திறந்த கண்ணாடிக் காரில் ஏறினார் திருத்தந்தை பிரான்சிஸ். Copacabana, ரியோ தெ ஜெனெய்ரோ நகருக்குத் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலின் ஓரத்திலுள்ள கடற்கரை நகரமாகும். இந்நகரத்தின் நான்கு கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உலகில் மிகவும் புகழ்மிக்க கடற்கரைகளில் ஒன்றாகும். இந்தப் புகழ்மிக்க Copacabana கடற்கரையில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தையின் வரவுக்காகக் காத்திருந்தனர். 180க்கும் மேற்பட்ட நாடுகளின் இலட்சக்கணக்கான இளையோர் தங்கள் தங்கள் நாடுகளின் கொடிகளையும், பாப்பிறைக் கொடிகளையும், ஒலிம்பிக் கொடிகளையும் பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்த சூழல், அந்த அட்லாண்டிக் பெருங்கடலின் சப்தத்தை அமுக்கிவிட்டது என்று நிருபர்கள் கூறினர். நான்கு கிலோ மீட்டர் தூரம்வரை அமர்ந்திருந்த இவர்கள் மத்தியில் திருத்தந்தை புன்முறுவல் நிறைந்த முகத்துடன் இரு பக்கங்களிலும் கைகளை நீட்டி இளையோருடன் கைகுலுக்கி, சிறு குழந்தைகளை முத்தமிட்டு தடவிக் கொடுத்து, இடையில் இளையோர் ஒரு டம்ளரில் கொடுத்த பானத்தைக் குடித்து அவர்கள் கொடுத்த கடிதங்களைப் பெற்றுக்கொண்டு மேடைக்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது.
காற்று, மழை, குளிர் என அங்கிருந்த மோசமான காலநிலையை இளையோரும் திருத்தந்தையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பிரமாண்டமான அழகிய மேடையின் நடுவில் பெரிய சிலுவை வைக்கப்பட்டிருந்தது. ஐந்து கண்டங்களைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு குழுவாக, தங்கள் தங்கள் நாடுகளின் கொடிகளைப் பிடித்துச் சென்றனர். பின்னர் 150 நடனக்கலைஞர்கள் அன்றாட நகர வாழ்க்கை பற்றி தத்துவரூபமாக நடித்துக் காட்டினர். அபரிசிதா அன்னைமரியா திருவுருவம் பரைய்பா ஆற்றில் அற்புதமாய்க் கிடைத்த நிகழ்வும் ஆடல் பாடல்களால் நடித்துக் காட்டப்பட்டது. அங்குத் தொடர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. இதன்பின்னர் இறைவார்த்தை வழிபாடு ஆரம்பமானது. ஆயிரம் ஆயர்கள் கலந்து கொண்ட இவ்வழிபாடு ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது என்ற தலைப்பில் நடைபெற்றது.
இவ்வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு வருகை தந்துள்ள உலக இளையோருக்கு நன்றிசொல்லி, இளையோர் மழையைவிட உறுதியானவர்கள் என்று பாராட்டினார். இவ்வுரையின் ஆரம்பத்தில், அண்மையில் ப்ரெஞ்ச் கயானாவில் பேருந்து விபத்தில் பலியான பிரான்ஸ் இளைஞி Sophie Morinièreவின் ஆன்மா நிறைசாந்தியடைய ஒரு நிமிடம் மௌனமாகச் செபிப்போம் எனக் கூறிச் செபித்தார். அங்கு உரையும் வழங்கினார் திருத்தந்தை.
பின்னர் உலகின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த ஐந்து இளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, வரவேற்பளித்தனர். அவ்விளையோர் திருத்தந்தையிடமிருந்து ஆசீரையும் ஒரு செபமாலையையும் பெற்றனர். மற்றுமொரு குழு, சிலுவைப்பாதை பக்திமுயற்சியை நாடகவடிவில் நடித்துக் காட்டியது. அபரிசிதா அன்னைமரியா திருவுருவம் பவனியாக எடுத்துவரப்பட்டு அம்மேடையில் வைக்கப்பட்டது. மொத்தத்தில் 300 இளையோர் இந்தக் கலை நிகழ்ச்சிகளில் நடித்தனர். திருத்தந்தை பிரான்சிஸ், இளையோருக்கு மீண்டும் உரையாற்றியபோது, கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருங்கள், கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தினார்.
Copacabana கடற்கரையில் உலக இளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அளித்த வரவேற்பு நிகழ்வே இவ்வியாழனன்று நடந்த கடைசி நிகழ்ச்சியாகும். திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரிலும், Copacabanaல் எத்தகையதொரு மறக்கமுடியாத வரவேற்பு!. இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என எழுதியுள்ளார். உண்மையில் இளையோரின் அத்தனை ஆடம்பரமான, அதேசமயம் உள்ளத்தை நெகிழவைக்கும் வரவேற்பில் மகிழ்ந்து, நல்ல நம்பிக்கை உணர்வுகளுடன் அன்றைய நாளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு சுமாரே பேராயர் இல்லச் சிற்றாலயத்தில் ரியோ தெ ஜெனெய்ரோவிலுள்ள குருத்துவ மாணவர்கள், அருள்பணியாளர்கள் என ஏறத்தாழ 300 பேருக்குத் திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். முற்பகல் 11 மணிக்கு ரியோ தெ ஜெனெய்ரோவின் வடக்கேயுள்ள Varginha சேரிப்பகுதிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணம் திட்டமிடப்பட்டபோது நிகழ்ச்சித் திட்டத்தில் Varginhaவைச் சேர்க்கச் சொன்னது திருத்தந்தையே என்பது குறிப்பிடத்தக்கது. ரியோவின் சுற்றுப்புறங்களில் பல குன்றுப் பகுதிகளிலுள்ள சேரிகளில் Varginhaவும் ஒன்று. ரியோவின் 20 விழுக்காட்டுக்கு அதிகமான மக்கள் சேரிகளில் வாழ்வதாக அரசின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இங்கு திருத்தந்தை சென்றபோது, பாதுகாப்புக்காக கெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. துப்பாக்கிகளுடன் காவல்துறையும் காவலில் இருந்தது. ஏனெனில் Varginha, ஒருகாலத்தில் போதைப்பொருள்களும் குற்றங்களும் மலிந்து கிடந்த பகுதியாகும். ஆயினும், இந்த ஏழை மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து திருத்தந்தைக்கு வரவேற்பளிக்கும் வார்த்தைகளை எழுதி வைத்திருந்தனர். குறுகிய தெருவில் கூட்ட நெருக்கடியில் சென்று கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைகளை முத்தமிட்டார். அக்கூட்டத்தினர் போட்ட காகித மாலையையும் கழுத்தில் போட்டுக்கொண்டார். Varginha சேரியில் ஒரு வீட்டில் நுழைந்து அக்குடும்பத்தினரோடு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அக்குடும்பத்தில் 93 வயது பாட்டி, 15 நாள்களுக்கு முன்னர் பிறந்த ஒரு குழந்தை உட்பட 20 பேர் 5 மீட்டர் அளவுடைய ஓர் அறையில் வாழ்கின்றனர். அக்குடும்பத்தினர் திருத்தந்தை அணைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். Varginhaவின் சிறிய பங்கு ஆலயத்தில் சிறிதுநேரம் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவ்வாலயத்துக்கான புதிய பீடத்தை ஆசீர்வதித்தார். அப்பங்குக்கு ஒரு நன்கொடையையும் வழங்கினார்.
Varginhaவின் சிறிய விளையாட்டு மைதானத்தில் அம்மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
திருஅவை, ஏழைகளின் திருஅவையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ், புவனோஸ் ஐரெஸ் பேராயராக இருந்தபோது அடிக்கடி சேரிகளுக்குச் சென்று மக்களைச் சந்திப்பார் என்பது கவனிக்கத்தக்கது.
Varginha சேரி மக்களை ஆசீர்வதித்த பின்னர் காரில் ஏறிய திருத்தந்தை பிரான்சிஸ், அவ்விடத்துப் பங்குக்குருவிடம் சொல்லிவிட்டு வரவில்லை என்று சொல்லி காரைவிட்டு இறங்கி அக்குருவை வாழ்த்திய பின்னர் காரில் ஏறி ரியோ நகரப் பேராலயம் சென்று, உலக இளையோர் தினத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் அர்ஜென்டினா இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புவனோஸ் ஐரெசில் 1987ம் ஆண்டில் நடைபெற்ற உலக இளையோர் தினப் பாடல் அந்நேரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அச்சந்திப்பில் அவர்கள் அர்ஜென்டினா லுஹான் அன்னைமரியா திருவுருவத்தை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். திருஅவை அரசு சாரா நிறுவனம் அல்ல, எனவே இளையோர் நற்செய்தியை தங்கள் பங்குகளில் மட்டுமல்லாமல் தெருக்களுக்கும் பொதுவிடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டுமெனவும், குடும்பத்திலும் சமுதாயத்திலும் வயதானவர்களை ஒதுக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும், 2016ம் ஆண்டில் பிரேசிலில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கொடிகளையும் இவ்வியாழனன்று நகர மேயர் மாளிகைத் தோட்டத்தில் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு சுமாரே பேராயர் இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி இந்நாளையத் திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் 9.45 மணியளவில் சுமாரேயிலிருந்து 19 கிலோ மீட்டரில் இருக்கின்ற Quinta da Boa Vista பூங்கா சென்றார் திருத்தந்தை. அழகான காடாக இருந்த இவ்விடம், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் இயேசு சபையினருக்குச் சொந்தமானதாக இருந்தது. பிரேசிலிலிருந்து இயேசு சபையினர் வெளியேற்றப்பட்ட பின்னர் அதனைப் பல்வேறு தனியாட்கள் உரிமை கொண்டாட சண்டையிட்டனர். தற்போது இது பொதுப் பூங்காவாக, ரியோ பல்கலைக்கழகம் கவனித்து வருகிறது. இவ்விடத்தில் சில இளையோரிடம் ஒப்புரவு அருள்சாதனத்தைக் கேட்டார் திருத்தந்தை. பின்னர் ரியோ நகரப் சில இளையோர் கைதிகளைச் சந்தித்தார். உலக இளையோரின் சிலுவைப்பாதை நிகழ்வில் கலந்து கொள்வது இவ்வெள்ளியன்று இடம்பெறும் இறுதி நிகழ்வாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Copacabana கடற்கரையில் உலக இளையோரிடம் கேட்டுக்கொண்டது போல கிறிஸ்துவை வாழ்வின் மையமாகக் கொள்வோம். கிறிஸ்துவை அணிந்து கொள்வோம். இறைவனை நம் வாழ்வின் மையமாகக் கொள்வோம். தங்களது ஏழ்மையைத் தவிர வேறு எதுவும் இல்லாத அதிகம் தேவையில் இருப்போரை நடத்தும் முறையை வைத்தே ஒரு சமுதாயத்தின் மகத்துவம் அறியப்படுகின்றது என்று இவ்வியாழன் இரவு தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவரின் செய்தி எந்த இதயங்களைத் தட்ட வேண்டுமோ அவைகளைத் தட்டிச் செயல்பட வைக்கட்டும்







All the contents on this site are copyrighted ©.