2013-07-26 15:39:04

Varginha மக்கள் குடியிருப்பில் திருத்தந்தை - தூக்கி எறியும் கலாச்சாரம் நம் இதயத்தில் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது


ஜூலை,26,2013. ஜூலை 25, வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Varginha என்ற பகுதியின் மக்கள் குடியிருப்பைச் சுற்றிவந்து, அங்குள்ள மக்களைச் சந்தித்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் ஏறி, அவர் மக்களுக்கு வழங்கிய உரை இது:
பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து அங்குள்ள மக்களைச் சந்திக்க எனக்கு அதிக ஆசை. ஒவ்வொரு வீடாகச் சென்று, உங்களை வாழ்த்தி, நீங்கள் தரும் தண்ணீர் அல்லது காபியைப் பருக ஆசை. ஆனால், பிரேசில் மிகப் பெரிய நாடு எனவே நான் Varginha குடியிருப்பிற்கு வந்தேன். உங்களைச் சந்திப்பதன் வழியாக, நான் பிரேசில் மக்கள் அனைவரையும் சந்திப்பதைப் போல் உணர்கிறேன். இந்தக் குடியிருப்பை நீங்கள் அலங்கரித்திருப்பதைக் காணும்போது, பிரேசில் மக்கள் கொண்டாட்டத்தை விரும்பும் மக்கள் என்பதை உணரலாம்.
அலங்காரம், கொண்டாட்டம் ஆகியவற்றைத் தாண்டி, பிரேசில் மக்கள் மனதில் உள்ள வரவேற்கும் குணம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது. இந்த வரவேற்பும், விருந்தோம்பலும் நம் மத்தியில் இருக்கும்வரை, நாம் வறியோர் அல்ல. பசியோடு உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் எவரும் உணவின்றிப் போகமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். "பருப்பில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்ப்போம்" என்று உங்களிடையே வழங்கப்படும் பழமொழி, உங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் அன்பு மொழி.
பிரேசில் மக்கள், குறிப்பாக, உங்களிடையே உள்ள மிகவும் வறிய மக்கள், சமுதாயத்தில் தோளோடு தோள் நின்று உதவுவது என்ற மேலான பாடத்தை உலகிற்குச் சொல்லித்தர முடியும். இவ்விதம் ஒன்றாக இணைவது எளிதல்ல. அதற்கு நாம் பல தியாகங்கள் செய்யவேண்டும். தன்னலத்தை விடுத்து அனைவர் நலனிலும் அக்கறை கொள்ளும் போதுதான் அனைவரும் தகுதியுடன் வாழக்கூடிய உலகை உருவாக்க முடியும்.
பிரேசில் மக்களிடம் நான் குறிப்பாக வேண்டுவது இதுதான்... யாரையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டாம். எந்த ஒரு சமுதாயமும் தன்னிடம் உள்ள மக்களில் சிலரை ஒதுக்கிவிட்டு அமைதியையும், வளமையையும் வளர்க்க முடியாது. தூக்கி எறியும் கலாச்சாரம் நம் இதயத்தில் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவருமே சகோதர சகோதரிகள். யாரும் ஒதுக்கப்படக் கூடியவர்கள் அல்ல. பகிர்வதால் மட்டுமே நாம் உண்மையில் செல்வம் மிகுந்தவர்களாய் வாழ முடியும். பகிரும்போது, அனைத்தும் பன்மடங்காக வளர்கிறது.
நீதியையும், சமத்துவத்தையும் வளர்க்கும் எந்த ஒரு முயற்சிக்கும் திருஅவை முழு ஆதரவு அளிக்கும். பசியில் இருப்போருக்கு உணவளிப்பது மிகவும் முக்கியமான கடமை. ஆயினும் அதைவிட, மனதில் எழும் பசி இன்னும் பெரிது. அந்தப் பசியைத் தீர்க்க இறைவனால் மட்டுமே முடியும். இறைவனை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் விரைவில் மனித குலத்தை பல பிரிவுகளாகத் துண்டாக்கும். எனவே முழுமையான முன்னேற்றத்தில் இறைவனும் ஆன்மீகமும் முக்கியப் பங்கு பெறவேண்டும்.
இறுதியாக நான் ஒன்றை கூற விழைகிறேன். பிரேசில் நாட்டில் இளையோரின் எண்ணிக்கை அதிகம். இளையோரே, அநீதியைக் கண்டு நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள். தன்னலத்தை முன்னிறுத்தி, பொது நலனில் அக்கறை கொள்ளாதவர்களைக் கண்டு நீங்கள் மனம் தளர்ந்து போகிறீர்கள். உங்களுக்கு நான் சிறப்பாகக் கூறுகிறேன்: மனம் தளரவேண்டாம், நம்பிக்கை இழக்கவேண்டாம். மக்கள் மாறக் கூடியவர்கள், நிலைமையும் மாறக் கூடியது. நன்மையை இவ்வுலகில் கொணர நீங்கள் முதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி அதிக அளவில் நடமாடும் தீமைகளுக்குப் பழகிப் போகாமல், அவற்றை நன்மையால் வெல்வதற்கு முதல் முயற்சிகளை எடுங்கள். திருஅவை உங்கள் முயற்சிகளில் துணை நிற்கும்.
Varginha குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் நான் சொல்ல விழைவது: நீங்கள் தனியே இல்லை, உங்களோடு திருஅவை உள்ளது, திருத்தந்தை உங்களோடு இருக்கிறார். உங்கள் அனைவரையும் என் உள்ளத்தில் ஏந்திச் செல்கிறேன். பிரேசில் நாட்டு அனைத்து வறியோரின் தாயான, Aparecida அன்னை மரியாவிடம் உங்கள் அனைவரையும் ஒப்படைக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.