2013-07-25 15:52:04

போபால் நகர் நச்சுவாயு கசிவு வழக்கின் முதன்மை குற்றவாளியான Dow Chemical நீதி மன்றத்திற்கு வரும்படி போபால் நீதி மன்றம் 'சம்மன்'


ஜூலை,25,2013. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் போபால் நகரில் இடம்பெற்ற நச்சுவாயு கசிவு வழக்கின் முதன்மை குற்றவாளியான Dow Chemical என்ற நிறுவனத்தை நீதி மன்றத்திற்கு வரும்படி போபால் நீதி மன்றம் 'சம்மன்' ஒன்றை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளது.
1984ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தினால், இதுவரை 25,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்குக் காரணமான Union Carbide என்ற நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow Chemical என்ற நிறுவனம் வாங்கியது. இந்த விபத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று Dow Chemical நிறுவனம் இதுவரைச் சொல்லிவருகிறது.
இத்தனை ஆண்டுகள் இந்த விபத்தைக் குறித்து மக்கள் தொடர்ந்து வந்த பல வழக்குகள் தோல்வியுற்ற நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ‘போபால் தகவல் மற்றும் செயல்பாடுகள்’ (The Bhopal Group of Information and Action) என்ற பெயரைத் தாங்கியுள்ள ஒரு சமூக நீதி அமைப்பு தொடுத்துள்ள வழக்கின் எதிரொலியாக, போபால் நீதி மன்றம் இச்சம்மனை அனுப்பியுள்ளது என்று UCAN செய்தி கூறியது.
நீதி மன்றத்தின் இந்த சம்மனுக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.