2013-07-25 16:27:59

திருத்தந்தையின் பிரேசில் நாட்டுத் திருப்பயணம் – நான்காவது நாள்


ஜூலை,25,2013 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்டுவரும் ரியோ தெ ஜெனெய்ரோவில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. ஆயினும் அங்கு கூடியுள்ள இளையோரின் ஆரவாரத்தை இக்காலநிலை பாதித்ததாகத் தெரியவில்லை. பிளாஸ்டிக் மழைக் கோர்ட்டுகள் மற்றும் குடைகளைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து இளையோர் ரியோவுக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு சுமாரே பேராயர் இல்லத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்தினார். அப்போது இந்திய நேரம் இவ்வியாழன் மாலை 4 மணியாகும். உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு சுமாரேயிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் காரில் வந்து பின்னர் ரியோ தெ ஜெனெய்ரோவின் நகர வளாகத்தில் திறந்த காரில் ஏறி அங்கு வலம் வந்த பின்னர், அந்நகர மாளிகைக்குச் சென்றார். அது நகர மேயரின் அலுவலகமாகும். அம்மாளிகையின் நுழைவாயிலில் திருத்தந்தையை வரவேற்றார் மேயர். அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சியில் திருத்தந்தைக்கு அந்நகரத்தின் சாவி கொடுக்கப்பட்டது. அம்மாளிகையில் ஒலிம்பிக் கொடிகளையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை. விளையாட்டு வீரர்கள் பிரதிநிதி குழு ஒன்றும் அந்நிகழ்வில் கலந்து கொண்டது. இந்நிகழ்வுக்குப் பின்னர் அங்கிருந்து 18 கிலோ மீட்டரில் இருக்கின்ற Varginha-Manguinhos என்ற சேரிப் பகுதிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வுக்குப் பின்னர் கோப்பகபானா கடற்கரையில் இளையோரைச் சந்திப்பது இவ்வியாழன் திருப்பயணத் திட்டத்தில் உள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வியாழன் திருப்பயண நிகழ்ச்சிகளில் அர்ஜென்டினா இளையோரையும் சந்திப்பதும் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா இளையோர் ரியோ வந்துள்ளனர். சிலர் 40 மணி நேரம் கரவான் வாகனங்களில் பயணம் செய்துள்ளனர். புவனோஸ் ஐரெஸ் உயர்மறைமாவட்டத்தின் நிதியுதவியால் சில ஏழைகளும் ரியோ வந்துள்ளனர். திருத்தந்தையைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ள இளையோரும் உண்டு.
இளையோர் தின விழாவில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தாலும் உலகின் பிற பகுதிகளில் துன்புறும் மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் மறக்கவில்லை. அர்ஜென்டினா ஏழைகள், தங்கள் நாட்டின் மகனான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, “சேரி திருத்தந்தை” என்று செல்லமாய்ப் பெயரிட்டுள்ளது போல, திருத்தந்தை பிரான்சிஸ் ஏழைகளின், துன்புறுவோரின், ஒதுக்கப்பட்டோரின், இளையோரின் திருத்தந்தையாக, தனது செயல்களால் காட்டி வருகிறார். தனக்காகச் செபிக்கக் கேட்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக, வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நாமும் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.