2013-07-25 16:35:54

திருத்தந்தை : “உங்கள் நம்பிக்கைகள் திருடப்பட ஒரு நாளும் அனுமதியாதீர்கள்”


ஜூலை,25,2013. Aparecida அன்னைமரி திருத்தல தரிசனத்திற்குப் பின்னர் என் பயணம், மனிதத் துயரங்களின் ஒரு குறிப்பிட்ட திருத்தலத்தில், புனித பிரான்சிஸ் அசிசி மருத்துவமனையில் இடம்பெற வேண்டும் என இறைவன் திட்டமிட்டுள்ளார். உங்களின் பாதுகாவலரான இப்புனிதரின் வரலாறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஏழைகளுள் ஏழையாக வாழும்பொருட்டு தன் சொத்து சுகங்களையெல்லாம் துறந்தார் இப்புனிதர். உண்மையான செல்வமும் மகிழ்வும் இவ்வுலகப்பொருட்கள் மூலமல்ல, மாறாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவது மற்றும் பிறருக்கு சேவைபுரிவதிலுமே கிட்டுகின்றது என்பதை உணர்ந்திருந்தார் அவர். இந்தப் புரிந்துகொள்ளுதல் அவரில் ஆழமாகப் பதிய ஆரம்பித்தபோது, அவர் அவ்வளவாகத் தெரியப்படாதவராக இருந்தார். புனித பிரான்சிஸ் ஒரு தொழுநோயாளியை வாரி அணைத்தபோது அந்த ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த துன்புறும் சகோதரர், புனித பிரான்சிஸுக்கு 'ஒளியின் இடையீட்டாளராக' இருந்தார். ஏனெனில், நாம் அரவணைக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியிலும் நாம் இறைவனை அரவணைக்கிறோம். போதைப்பொருள் அடிமைத்தனத்தோடு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் வாழும் இவ்விடத்தில் நான், கிறிஸ்துவின் உடலாக இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் அரவணைக்க விரும்புகிறேன். ஒரு நோக்குடனும் உறுதியான நம்பிக்கையுடனும் இருக்கும்படி, உங்கள் பயணமும் என்னுடையதும் புதுப்பிக்கப்படுமாறு இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
தேவையிலிருப்போரை அரவணைக்க, புனித பிரான்சிஸ் போல் நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். பராமரிப்பு, அக்கறை, மற்றும் அன்பு தேவைப்படும் மக்கள் பிரேசில் நாட்டிலும் உலகிலும் அதிகமாகவே உள்ளனர். ஆனால் பெரும்பாலும் சுயநலமே இவ்வுலகை ஆக்கிரமித்து நிற்கிறது. எந்த விலை கொடுத்தும் பணம் மற்றும் அதிகாரத்தின் வாதப்போக்குகளைப் பின்பற்றும் 'மரண வியாபாரிகள்' நிறையவே உள்ளனர். வன்முறைகளுக்கு ஆதரவளித்து, துன்பங்களையும் சாவையும் விதைக்கும் போதைப்பொருள் கடத்தல் எனும் கொடுமைக்கு எதிராக இந்தச் சமுதாயத்தின் ஒன்றிணைந்த நெஞ்சுறுதி தேவைப்படுகின்றது. போதைப்பொருள் பயன்பாட்டின்மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் போதைப்பொருள் பரவலையும் அதன் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியும் என இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பல பகுதிகளில் முன்வைக்கப்பட்டுவரும் பரிந்துரைகள் வெற்றியடையக்கூடியவை அல்ல. அதற்கு மாறாக, இந்தப் போதைப்பொருள் பயன்பாட்டால் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழிகள் ஆராயப்படவேண்டும். மேலும் நீதியான உலகை ஊக்குவிப்பதன் மூலமும், சமூகத்தில் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்குரிய மதிப்பீடுகளை இளையோருக்கு கற்பிப்பதன் மூலமும், போதைப்பொருள் பயன்பாட்டால் துன்பங்களை அனுபவிப்போருடன் இணைந்து சென்று அவர்களுக்கு வருங்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டுவதன் மூலமும் இப்பிரச்சனையை அணுகலாம். நாம் அனைவரும், அருகாமையையும், பாசத்தையும், அன்பையும் காண்பிக்கும்பொருட்டு, இயேசுவின் அன்பு காட்டும் கண்கொண்டு நோக்கி, உதவித் தேவைப்படும் மக்களை அரவணைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருவரை அரவணைப்பது மட்டும் போதாது. உதவியில் தேவைப்படுவோரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவர்களால் எழும்ப முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை ஊட்டவேண்டும். இது கடினமானது, ஆனால், விரும்பினால் முடியாதது அல்ல. உங்களுக்கும் , உங்களையொத்த ஏனையோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், 'நீங்கள் எழும்பியே ஆகவேண்டும்'. உங்களுக்கு உதவும்பொருட்டு கைகள் நீட்டப்பட தயாராக உள்ளன. நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கு நெருக்கமாக திருஅவையும் எண்ணற்ற மக்களும் உள்ளனர். நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பாருங்கள். உங்கள் தினசரி வாழ்வில் பலத்தையும், வித்தியாசமான உதயத்தையும் தரும் வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குங்கள். உங்கள் நம்பிக்கைகள் திருடப்பட ஒரு நாளும் அனுமதிக்காதீர்கள். அதுமட்ட்டுமல்ல, பிறர் நம்பிக்கைகளையும் திருடாதீர்கள். அதற்கு மாறாக, நம்பிக்கையை ஏந்திச் செல்பவர்களாக இருங்கள்.
நற்செய்தி நூலில் நாம் நல்ல சமாரியர் குறித்த உவமையைக் காண்கிறோம். திருடர்களால் காயமுற்ற ஒருவர், சாலையில் குற்றுயிராகக் கிடக்க, அப்பகுதியில் கடந்து சென்ற எவரும், அவர் குறித்து கவலைப்படாமல், பாராமுகமாய்ச் சென்றனர். இது என் வேலையில்லை என எண்ணினர். ஆனால், அந்நியரான சமாரியர் ஒருவரே நின்று, காயமுற்றவரை தூக்கி, தன் கைகளில் கிடத்தி, அக்கறையுடன் செயல்படுகிறார். இந்த மருத்துமனையிலும் நல்ல சமாரியர் உவமை உண்மையாக்கப்பட்டுள்ளது. இங்கு பாராமுகம் இல்லை, மாறாக அக்கறையுள்ளது. அக்கறையற்ற நிலை இங்கில்லை, மாறாக அன்புள்ளது. புனித பிரான்சிஸ் அமைப்பும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களிடையே பணிபுரியும் வலையமைவும், துன்பத்தில் இருக்கும் மக்களை எவ்விதம் அணுகி உதவுவது என்பதைக் காண்பிக்கின்றன. துன்புறும் இந்த மக்களில் நாம் இறைவனின் முகத்தைக் காணலாம். இவர்களில், இயேசுவின் உடல், வேதனைகளை அனுபவிக்கிறது. இங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் என் நன்றியை வெளியிடுகிறேன். உங்கள் பணி மேன்மை நிறைந்தது. அதனை எப்போதும் அன்புடன் நிறைவேற்றுங்கள். இது நம் சகோதர சகோதரிகளில் குடியிருக்கும் கிறிஸ்துவுக்கு ஆற்றும் பணி. இயேசு நம்மிடம் கூறுகிறார், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்று.
போதைப்பொருள் பயன்பாட்டை விட்டொழிக்கப் போராடும் மக்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், 'திருஅவை உங்களின் துன்பங்களிலிருந்து விலகியில்லை. அது பாசமுடன் உங்களோடு இணைந்து வருகிறது. கடவுள் உங்கள் அருகில் இருந்து உங்களைக் கைப்பிடித்து வழிநடத்துகிறார். உங்களின் துன்பகரமான வேளைகளில் அவரை உற்றுநோக்குங்கள். அவர் உங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருவார். அன்னைமரியின் தாய்க்குரிய அன்பில் நம்பிக்கை வையுங்கள். இன்று காலை Aparecida அன்னை மரி திருத்தலத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் அன்னையின் இதயத்தில் அர்ப்பணித்தேன். சிலுவையைச் சுமந்து செல்லவேண்டிய இடங்களில் எல்லாம், நம் அன்னை எப்போதும் அவ்விடத்தில் நம்மோடு இருக்கிறார். நான் உங்கள் அனைவரையும் அவர் கைகளில் ஒப்படைத்துச் செல்கிறேன். மிகுந்த பாசத்துடன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்.







All the contents on this site are copyrighted ©.