2013-07-25 15:50:58

சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, துயர் துடைப்புப் பணியில் கத்தோலிக்கர்கள் தீவிரம்


ஜூலை,25,2013. ஜூலை 22, இத்திங்களன்று காலை 7.45 மணியளவில் சீனாவின் Gan Su பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, அப்பகுதியில் கத்தோலிக்கர்கள் துயர் துடைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, 400க்கும் அதிகமான நில அதிர்வுகள் நிகழ்ந்தன என்றும், மாலை 6 மணிக்குள் Lan Zhou மறைமாவட்டமும், Jinde என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பும், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான பொருட்களை கொண்டு சென்றுள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து, Xiao Gou Tou என்ற பங்குக் கோவிலின் இளையோர், நகரின் நடுப்பகுதியில், எவ்விதத் தூண்டுதலும் இன்றி, ஒன்றாகக் கூடிவந்து செபிக்கத் துவங்கினர் என்றும், இதைக் கண்ட வேறு மதத்தவரும் இந்த செப முயற்சியில் பங்கேற்றனர் என்றும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
இதுவரை கிடைத்தத் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் இறந்துள்ளனர், 1000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும், 5,82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.