2013-07-25 15:44:21

கத்தோலிக்க இளையோர் உலகத்தின் தலைநகரமாக ரியோ தெ ஜனெய்ரோ இந்நாட்களில் விளங்குகிறது - கர்தினால் Stanislaw Rylko


ஜூலை,25,2013. கத்தோலிக்க இளையோர் உலகத்தின் தலைநகரமாக ரியோ தெ ஜனெய்ரோ இந்நாட்களில் விளங்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை 23ம் தேதி இச்செவ்வாயன்று 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்கத் திருப்பலியின் ஆரம்பத்தில், திருப்பீடத்தின் பொதுநிலையினர் பணி அவையின் தலைவரான கர்தினால் Stanislaw Rylko அவர்கள், இளையோரை வரவேற்று பேசியபோது இவ்வாறு கூறினார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு, உலக இளையோர் நாள் நிகழ்வுகள் மீண்டும் இலத்தீன் அமெரிக்காவில் இடம்பெறுகின்றன என்பதை நினைவுகூர்ந்த கர்தினால் Rylko அவர்கள், 1987ம் ஆண்டு Buenos Aires நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது, "நீங்களே திருத்தந்தையின் நம்பிக்கை" என்று முத்திபேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இளையோரிடம் கூறிய வார்த்தைகளை மீண்டும் எடுத்துரைத்தார்.
கரங்களை விரித்து இவ்வுலகை அணைக்கும் வண்ணம் நின்றிக்கும் மீட்பர் கிறிஸ்துவே இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் நாயகன் என்று கூறிய கர்தினால் Rylko அவர்கள், கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்போர் எதையும் இழப்பதில்லை என்ற உறுதியை அளித்தார்.
உலகின் உப்பாகவும், ஒளியாகவும் திகழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல், நமது சுகமானச் சூழல்களை விடுத்து, உலகின் எல்லைகளுக்குக் கிறிஸ்துவைச் சுமந்து செல்வோம் என்ற அழைப்பை விடுத்தார் கர்தினால் Rylko.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.