2013-07-25 15:50:23

LRAன் வன்முறைகளை அடக்க ஆப்ரிக்க நாடுகள் தங்கள் இராணுவத்தை நம்பி இருப்பது நிரந்தரத் தீர்வு அல்ல - ஆயர் Hiiboro Kussala


ஜூலை,25,2013. ‘இறைவன் போராட்டப் படையின் கொரில்லாக்கள்’ என்ற பொருள்படும் LRA என்ற அமைப்பின் தலைவரான ஜோசப் கோனியையும், (Joseph Kony) அவரது வன்முறைகளையும் களைய உலகச் சமுதாயம் இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தெற்கு சூடான் நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
தெற்கு சூடான் நாட்டின் தம்புர-யாம்பியோ (Tambura-Yambio) என்ற மறைமாவட்டத்தின் ஆயர் Edward Hiiboro Kussala அவர்கள், Aid to the Church in Need எனப்படும் பிறரன்பு அமைப்பிற்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட LRA என்ற வன்முறை அமைப்பு, ஆப்ரிக்காவின் உகாண்டா, தெற்கு சூடான், காங்கோ ஆகிய நாடுகளில் சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று அடிமைகளாக நடத்துவதும், மக்களின் இல்லங்களுக்குத் தீவைத்து அழிப்பதும் என்று தங்கள் வன்முறையை பரப்பி வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
LRA வன்முறைக் குழுவால் அச்சத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது என்று கூறிய ஆயர் Hiiboro அவர்கள், ஜோசெப் கோனியின் வன்முறைகளை அடக்க ஆப்ரிக்க நாடுகள் பல தங்கள் இராணுவத்தை நம்பி இருப்பது நிரந்தரத் தீர்வு அல்ல என்று கூறினார்.
நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதும், உலக நாடுகளின் தலையீடும் இந்தக் குற்றக் குழுவின் செயல்பாடுகளை நிறுத்தும் வழி என்பதையும் ஆயர் Hiiboro தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.