2013-07-24 15:26:12

ரியோவில் கூடியிருக்கும் இளையோரிடையே காணப்படும் மகிழ்வு, இறைவனின் புன்னகையை உலகிற்குப் பறைசாற்றுகிறது - இத்தாலியக் கர்தினால் Bagnasco


ஜூலை,24,2013. உலகின் பல நாடுகளிலிருந்தும் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் கூடியிருக்கும் இளையோரிடையே காணப்படும் மகிழ்வு, இறைவனின் புன்னகையை உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று இத்தாலியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் இடம்பெறும் 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்கு சென்றிருக்கும் இத்தாலிய இளையோரை Casa Italia என்ற இல்லத்தில் சந்தித்த இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco அவர்கள், அவ்வில்லத்தில் காணப்பட்ட ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் கண்டு இவ்வாறு கூறினார்.
இச்செவ்வாய் மாலை இவ்விளையோருக்கு சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Bagnasco அவர்கள், இளையோர் ஒவ்வொருவருடனும் பேசி மகிழ்ந்திருந்ததை, Zenit கத்தோலிக்க நாளிதழ் "பிரான்சிஸ் தாக்கம்" என்று விவரித்தது.
2000மாம் ஆண்டு இத்தாலியின் உரோம் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்கென இயற்றப்பட்ட இளையோர் நாள் பாடலை அவ்வில்லத்தில் கூடியிருந்த இளையோர் பாடியதை, கர்தினால் Bagnasco அவர்கள் பாராட்டியதோடு, பிரேசில் நாட்டில் தாங்கள் பெற்றுள்ள வரவேற்புக்கு நன்றியும் கூறினார்.

ஆதாரம் Zenit








All the contents on this site are copyrighted ©.