2013-07-24 15:31:10

மத்தியக் கிழக்குப் பகுதிலிருந்து வெளியாகும் புள்ளி விவரங்கள் திருப்பீடத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்


ஜூலை,24,2013. மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதியற்றச் சூழலிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் புள்ளி விவரங்கள் திருப்பீடத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவையின் அமர்வுகளில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு குறித்து நியூ யார்க் நகரில் இச்செவ்வாயன்று நடைபெற்ற அமர்வு ஒன்றில் இவ்வாறு கூறினார்.
'சிரியாவில் ஓர் அரசியல் தீர்வு உருவாவதற்குள் இன்னும் எவ்வளவு இரத்தம் சிந்தப்படவேண்டும்' என்று உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கிய 'ஊருக்கும் உலகுக்கும்' செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய அனைத்து நாடுகளிலும் அமைதி உருவாக கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளது என்று கூறினார்.
சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் போராட்டங்களால் அந்நாட்டு மக்களில் பத்தில் ஒரு பகுதியினர், அதாவது, 1 கோடியே, 80 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தோராக வாழ்வது மிகவும் வேதனையான உண்மை என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் எடுத்துரைத்தார்.
மக்களின் துயரங்களை மனதில் கொள்ளாமல், அடிப்படைவாதக் கொள்கைகளை நிலைநாட்ட ஒவ்வொரு குழுவும் ஆயுதம் ஏந்தும்போது, தீர்வுகள் கிடைப்பது அரிதாகிறது என்பதையும் திருப்பீடப் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தரப்பினரும், ஆயுதங்களைக் களைந்து, பேச்சு வார்த்தைகளிலும், ஒப்புரவிலும் தங்கள் கவனத்தைத் திருப்புவதையே திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.