2013-07-24 15:34:12

தமிழ் நூல்களை ஒலிவடிவ புத்தகங்களாக மாற்றும் அமெரிக்க தமிழர்


ஜூலை,24,2013. கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த் அவர்கள், ஒலிவடிவ புத்தகங்களாக உருவாக்கி வருகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த் அவர்கள், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்த் அவர்கள், அங்குள்ள, Stanford பல்கலை கழக வானொலியில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலநிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறார்.
அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஒலிவடிவ புத்தகங்களாக தயாரிப்பது. கல்கியின், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஒலிவடிவ புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஒலிவடிவ புத்தகமாக மாற்றும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இவருடைய ஒலிவடிவ நாவல்களைக் கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையைப் பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: www.tamilaudiobooks.com

ஆதாரம் - Thinamalar








All the contents on this site are copyrighted ©.