2013-07-24 15:47:07

28வது உலக இளையோர் தினத் தொடக்க நிகழ்வு


ஜூலை,24,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணமாகிய இந்தப் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் அந்நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வதாகும். இவ்விளையோர் தினக் கொண்டாட்டங்களை இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்குத் திருப்பலியுடன் தொடங்கி வைத்தார் Sao Sebastiao do Rio de Janeiro பேராயர் Orani Joao Tempesta. அப்போது இந்தியாவுக்கு இப்புதன் அதிகாலை 3.30 மணியாக இருந்தது.
ரியோ தெ ஜனெய்ரோவின் Copacabana கடற்கரையில் ஏறக்குறைய 400 ஆயர்களுடன் இத்திருப்பலியை நிகழ்த்திய பேராயர் Tempesta தனது மறையுரையில், விசுவாசத்தை வாழ்கின்ற ஒரு புதிய தலைமுறையை, தங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு இவ்விசுவாசத்தை வழங்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்குமாறு இளையோரைக் கேட்டுக்கொண்டார். 190 நாடுகளின் ஏறக்குறைய ஐந்து இலட்சம் இளையோர் அத்திருப்பலியில் கலந்து கொண்டார்கள் என்றால் அத்திருப்பலி எவ்வளவு ஆடம்பரமாக இருந்திருக்கும்? இத்திருப்பலி குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அவ்வானொலியின் இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி,
“காற்றும், மழையும், அட்லாண்டிக் பெருங்கடலின் பெரும் அலைகளும் எந்த ஓர் இளைஞரையும் பாதித்ததாகத் தெரியவில்லை. இது ஒரு சிறப்பான சூழலாக இருந்தது. ரியோவில் இப்படி இருந்திருக்கிறது, ஆனால் காற்றும் மழையும் இருந்த மோசமான காலநிலையில் இப்படி இளையோரைக் கண்டது ஒரு மாறுபட்ட அனுபவம். மத்ரித் இளையோர் சந்திப்பின்போது இரவில் புயலோடு மழை பெய்தது. சில சூழல்களின்போது வரும் இன்னல்கள், இளையோரின் மிக உறுதியான நேர்மறைப் போக்கையும், ஆர்வத்தையும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது, சவால்மிக்க காலநிலையில் நல்ல ஓர் ஆன்மீக உணர்வோடு இவ்விளையோர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்”
என்றும் தெரிவித்தார். இளமைத் துடிப்போடு தங்கள் தங்கள் நாடுகளின் கொடிகளைப் பிடித்துக்கொண்டு பல மொழிகளில் இளையோர் உரையாடியதைக் கேட்டபோது புதிய தலைமுறை பற்றிய நம்பிக்கை அனைவருக்கும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்விளையோர் தின நாள்களில் 270க்கும் மேற்பட்ட இடங்களில் 26 மொழிகளில் மறைக்கல்வி வகுப்புகள் நடக்கின்றன. டெல்லியின் முன்னாள் பேராயர் வின்சென்ட் கொன்சஸ்சாவோ உட்பட 250க்கும் மேற்பட்ட ஆயர்கள் இவ்வகுப்புகளை நடத்துகின்றனர். இந்த 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் இளையோரில் குருவாக, அருள்சகோதரியாக பணிபுரிய இறையழைத்தல் உருவாகியிருப்பதையும் எம் நிருபர்கள் கூறியுள்ளனர். இந்நிகழ்வுகளை நேரில் பார்ப்பது கிடைத்தற்கரிய அனுபவமாக இருக்கின்றது என்று எம் நிருபர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஒரு வார இளையோர் விழா வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியுடன் நிறைவுக்கு வரும். அன்று உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு உரோமுக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.