2013-07-22 16:00:56

விவிலியத் தேடல் இறைவேண்டல் பற்றிய இரு உவமைகள் - பகுதி 2


RealAudioMP3 ஜூலை 22, இத்திங்கள் காலை உரோம் நேரம் 8.45 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் மேய்ப்புப்பணி பயணத்தைத் துவக்கினார். பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் இடம்பெறும் 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, திருத்தந்தை அங்கு சென்றுள்ளார். திருத்தந்தை அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒரு வாரப் பயணம், எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக அமையவும், 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் பொருளுள்ள வகையில் இடம்பெறவும் இறையருளை இறைஞ்சுவோம்.
கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக நம் விவிலியத் தேடலில் இறைவேண்டுதல் குறித்த பாடங்களை இயேசு கூறிய இரு உவமைகள் வழியே சிந்தித்து வருகிறோம். இன்று சிறப்பாக, இறைவேண்டுதலையும், உலக இளையோர் நாளையும் இணைத்து சிந்திக்க முயல்வோம்.

முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் திருஅவையின் தலைமைப் பணியில் இருந்தபோது, கத்தோலிக்கத் திருஅவைக்கும் உலகிற்கும் அவர் ஆற்றிய பணிகளும், வழங்கிய பரிசுகளும் பல. அவை இன்றும் நம்மிடையே பலன்களை அளித்து வருகின்றன. அவர் வழங்கிய பரிசுகளில் ஒன்று, உலக இளையோர் நாள். ஐ.நா. பொது அவை 1985ம் ஆண்டினை 'அகில உலக இளையோர் ஆண்டு' என அறிவித்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் உலக இளையோர் நாளை அதே ஆண்டு உருவாக்கினார். 1986ம் ஆண்டு முதல் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

உலகில் இன்று எவ்வகை நிகழ்வுகள் இளையோரை ஒன்று திரட்டுகின்றன என்று அலசிப் பார்த்தால், அவை பெரும்பாலும் இசை அல்லது விளையாட்டு விழாக்களாக இருக்கும். இத்தகையப் போக்கிற்கு ஒரு மாற்றாக, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடும் உலக இளையோர் நாள் அமைந்துள்ளது. 20 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இளையோர் இவ்வாரம் முழுவதும் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் மேற்கொள்ளும் நிகழ்வுகள் இறைவனை மையப்படுத்தியாக அமையும். இளையோர் இந்த நாட்களில் அதிகம் செலவிடப் போகும் நேரங்கள் செப நேரங்கள்.
1995ம் ஆண்டு சனவரி 10ம் தேதி முதல் 15ம் தேதி முடிய பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் 40 முதல் 50 இலட்சம் இளையோர் கலந்துகொண்டனர் என்றும், இது ஓர் உலகச் சாதனை என்றும் அழைக்கப்படுகிறது.
உலகச் சாதனை படைக்கும் அளவு இளையோர் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடும் நேரங்களில் கட்டுக்கடங்காத ஆர்வத்தால் அல்லது வேறு பல உணர்வுகளால் எதிர்பாராத வன்முறைகளும், வேறு பல விளைவுகளும் வெடித்துள்ளன. இளையோரிடையே நிலவும் வேறுபாடுகளை பெரிதுபடுத்தி, போட்டி மனப்பான்மையை வளர்த்துவிட்டால் அங்கு வன்முறைகள் வெடிப்பதில் வியப்பில்லையே!
கட்டுப்பாடற்றுச் செல்லும் இத்தகைய இளையோர் கூட்டங்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக கத்தோலிக்கத் திருஅவை நடத்தியுள்ள உலக இளையோர் நாள் நிகழ்வுகள் இதுவரை அமைந்துள்ளன. இந்நிகழ்வுகள் கடவுளையும், செபத்தையும் மையப்படுத்தி அமைந்ததே இத்தகைய கண்ணியமான விளைவுகளுக்குக் காரணம். பல்வேறு நாடுகள், மொழிகள், கலாச்சாரங்கள் என்ற பின்னணியிலிருந்து இளையோர் இலட்சக்கணக்கில் கூடிவந்தாலும், இறைவேண்டல் என்ற ஒரே கருத்து அவர்களைப் பிணைக்கின்றது.

இளையோர் செபிக்கின்றனரா? என்ற ஆதங்கம் நிறைந்த கேள்விகளும், இளையோர் செபிப்பதில்லை என்ற அவசர முடிவுகளும் அடிக்கடி எழுகின்றன. இக்கேள்விகளுக்கும், அவசர முடிவுகளுக்கும் தகுந்த விடையாக இதுவரை நிகழ்ந்துள்ள 27 உலக இளையோர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தன என்று உறுதியாகச் சொல்லலாம். அதேபோல், பிரேசில் நாட்டில் இவ்வாரம் நடைபெறும் 28வது உலக இளையோர் நாளும் அமையும் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக, 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி முடிய ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது, ஆகஸ்ட் 20, சனிக்கிழமை இரவு, 10 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் Cuarto Vientos எனுமிடத்தில் திரு நற்கருணை ஆராதனைக்காகவும், முழு இரவு திருவிழிப்பு வழிபாட்டுக்காகவும் கூடியிருந்தனர். மத்ரித் நகரில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தாலும், இளையோர் அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக, கட்டுப்பாட்டுடன் கூடியிருந்தனர்.
இந்த வழிபாடுகளில் கலந்துகொள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அத்திடலுக்கு வந்து சேர்ந்தபின், திடீரென திரண்ட மேகம், இடியுடன் கூடிய புயல் மழையை உருவாக்கியது. அத்திடலில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் ஓரளவு சிதைக்கப்பட்டன; மின்தடையும் ஏற்பட்டது. இருப்பினும், திரு நற்கருணை வழிபாடும் திருவிழிப்பு வழிபாடும் தொடர்ந்தன. திருத்தந்தை அவர்களும் அவ்விடம் விட்டு அகலவில்லை. அங்கு வீசிய சிறு புயல் மழையின்போது வேண்டிக்கொண்ட அனுபவம் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு தனித்துவமான அனுபவம் என்று பல்லாயிரம் இளையோர் சான்று பகர்ந்தனர். வெயிலோ மழையோ இளையோரின் செப முயற்சிகள் தொடரும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

சரியாக 30 நாட்களுக்கு முன், அதாவது, ஜூன் 23ம் தேதி, ஞாயிறன்று, Nik Wallenda என்ற ஓர் இளைஞர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி, செபத்திற்கும் இளையோருக்கும் இடையே நிலவும் உறவை வெளிச்சத்திற்குக் கொணரும் மற்றோர் எடுத்துக்காட்டு. "பெரும் பள்ளத்தாக்கு" என்று பொருள்படும் Grand Canyon, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஓர் இயற்கை அதிசயம். எவரஸ்ட் சிகரம் என்ற இயற்கை அதிசயத்தின் உச்சிக்குச் செல்ல மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல, இந்தப் பள்ளத்தாக்கை பல வழிகளில் கடப்பதற்கு மனிதர்கள் வியக்கத்தக்க முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர்.
ஜூன் 23ம் தேதியன்று இந்தப் பள்ளத்தாக்கின் இரு கரைகளையும் இணைத்து கட்டப்பட்ட ஓர் இரும்புக் கம்பியின் மீது Nik Wallenda என்ற 34 வயது இளைஞர் நடந்து சென்று, உலகச் சாதனை படைத்தார். இளையோர் இவ்வகையான உலகச் சாதனைகளை அவ்வப்போது ஆற்றிய வண்ணம் உள்ளனர். Nik ஆற்றிய சாதனையை நமது தேடலில் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
இச்சாதனையைக் குறித்து, பல நாளிதழ்கள் விவரங்களை வெளியிட்டன. அவற்றில் இந்தியச் செய்தித்தாளான 'The Hindu', ஜூன் 25ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியின் தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது. "On a rope and a prayer" - "கயிற்றின் மேல் செபத்துடன்" என்பதே அந்தத் தலைப்பு.
இந்தச் சாதனையைத் துவங்குமுன்னர், Nik தன் மனைவி, மகன், மகள் மற்றும் ஓர் இறைபணியாளர் உடன் கரங்களைக் கோர்த்து செபித்தார். பின்னர், தன் முயற்சியைத் துவக்கினார். Grand Canyon பள்ளத்தாக்கின் இரு கரைகளையும் இணைத்த 476 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கயிற்றின் மீது Nik எவ்வித தற்காப்பு ஏற்பாடுகளுமின்றி இந்த முயற்சியை மேற்கொண்டார். அவர் நடந்த அந்த உயரத்திலிருந்து கீழே ஓடிய 'கொலராடோ' நதி 457 மீட்டர் ஆழத்தில் இருந்தது. சிறு தவறு ஏற்பட்டிருந்தாலும், இறப்பது உறுதி. அவர் கம்பியின் நடுப்பகுதிக்கு வந்தபோது வீசிய காற்றின் வேகம் அவர் எதிர்பாராத அளவு அதிகமாக இருந்ததால், அவர் கம்பியில் இரு முறை அமர வேண்டியிருந்தது. ஒரு கழியைக் கையில் ஏந்தி அவர் கம்பிக் கயிற்றில் நடந்தபோது, இறைவனை சப்தமாகப் புகழ்ந்தவண்ணம் நடந்தார். "Praise you, Jesus" அல்லது, "Thank you Jesus" என்று தொடர்ந்து சொல்லியபடி நடந்தார். அவர் மீது பொருத்தப்பட்டிருந்த 'மைக்' வழியாக அவர் வாய்விட்டுச் சொன்ன இந்த மந்திரங்களை தொலைக்காட்சி வழியாக இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்த பல்லாயிரம் மக்கள் கேட்டனர்.
Nik Wallenda அந்தக் கம்பிக் கயிற்றைக் கடந்துசெல்ல எடுத்துக் கொண்ட 23 நிமிடங்கள் முழுமையும் இறைவனைப் புகழ்ந்தபடியே நடந்தார். நம்மில் சிலர், இதனை ஒரு செபம் என்று ஏற்றுக் கொள்ள தயங்குவோம். செபம் என்றால் இந்த இடத்தில், இந்நேரத்தில் இவ்வகையில் இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுப்பவர்களுக்கு, இது செபமாகத் தெரியாமல் போகலாம் ஆனால் இறைவனோடு கொள்ளும் உறவுகள் எல்லாமே செபம் என்ற கோணத்தில் சிந்திக்கும்போது Nik Wallenda அக்கயிற்றின் மீது சொன்னதெல்லாம் செப முயற்சியே என்பது தெளிவாகும்.

இந்தச் சாதனைக்குப் பிறகு, செய்தித்தாள்களிலும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் Nik அளித்த பேட்டிகளில் மீண்டும், மீண்டும் அவர் கூறிய கருத்து இதுதான்: "அந்தக் கயிற்றில், அந்தரத்தில் நான் நின்றபோது, நடந்தபோது, மேலே இருக்கும் கடவுள் மட்டுமே நான் சொல்வதைக் கேட்க முடியும் என்பதைத் தொடர்ந்து உணர்ந்தேன்."
Nik Wallenda வாழ்க்கை அனுபவங்களைத் திரட்டி, அண்மையில் ஒரு நூல் வெளியானது: Balance: A Story of Fatith, Family and Life on the Line அதாவது, "சமநிலை: நம்பிக்கை, குடும்பம், கயிற்றின் மீது அமைந்த வாழ்வு - கதை" என்பது அந்த நூலின் தலைப்பு. Nik வாழ்வுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான இளையோரின் வாழ்வுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு இது. இளையோர் பலரின் வாழ்வு கயிற்றின் மீது நடப்பது போன்று அமைந்துள்ளது. இச்சூழலில் அவர்களை சமநிலையில் வைக்கக்கூடியது குடும்பமும், இறை நம்பிக்கையும். இந்த நூலில் Nik Wallenda பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகள் பொருளுள்ள வார்த்தைகள்: "இறைவன் அருள் என்பது என்னைத் தடுமாறாமல் காக்கும் கழி. தன்னலம், தன்னைப்பற்றிய அளவுக்கு அதிகமான நம்பிக்கை என்ற பள்ளங்களில் நான் விழாதவாறு காப்பாற்றும் கழி. அவருடன் நான் கொண்டுள்ள உறவு இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வாழ்வில் சாதித்திருக்க முடியாது."
Guinness உலகச் சாதனைகள் 7 Nik Wallenda பெயரில் உள்ளன. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி இவர் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் கம்பிக்கயிறு கட்டி நடந்ததும் இந்தச் சாதனைகளில் ஒன்று.

இளையோர் செபிக்கின்றனரா என்று கேள்வி எழுப்பும் நமக்கு இவ்வாரம் முழவதும் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் 2 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் செப முயற்சிகள் தகுந்த பதிலாக அமையட்டும். இளையோரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஈடுபட்டுள்ள இந்த முயற்சியின்போது, அவர்கள் மட்டும் செபிக்கப்போவதில்லை. அதே நேரத்தில் உலகின் பல நாடுகளில் உலக இளையோர் நாளுக்கென செபங்கள் விண்ணகத்தை நோக்கி எழுந்தவண்ணம் இருக்கும். ஜூலை 19ம் தேதி, கடந்த வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓய்வில் இருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தனியே சந்திக்கச் சென்றார். 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம்... தான் மேற்கொள்ள விருக்கும் முதல் மேய்ப்புப்பணி பயணத்திற்கும், இளையோர் நாள் நிகழ்வுகளுக்கும், முன்னாள் திருத்தந்தை அவர்கள் சிறப்பாகச் செபிக்கும்படி விண்ணப்பிக்கவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சந்திப்பை மேற்கொண்டார். எனவே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் இணைந்து இந்த உலக இளையோர் நாளுக்கென நாமும் செபங்களைத் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.